பசிபிக் பெருங்கடலில் உருவாகி வரும் வலுவான அல்நினோ தற்போது உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த நிகழ்வு இன்னும் உச்சத்தை அடையாத நிலையிலேயே கடல் வெப்பநிலை மற்றும் உலக வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க தாக்கம் காணப்படுவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
அல்நினோவின் போது பசிபிக் கடலில் சேமிக்கப்பட்டுள்ள அதிகப்படியான வெப்பத்தின் ஒரு பகுதி வளிமண்டலத்துக்கு செல்லும். இதனால் ஏற்கெனவே புவி வெப்பமடைந்து வரும் நிலையில், உலக சராசரி வெப்பநிலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. தற்போதைய அல்நினோ வரலாற்றில் மிகவும் வலுவான நிகழ்வுகளில் ஒன்றாக மாறக்கூடும் என பல கணிப்புகள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக 2026-ஆம் ஆண்டின் இறுதி மாதங்களிலும் 2027-ஆம் ஆண்டின் தொடக்கத்திலும் இதன் தாக்கம் அதிகமாக இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. 2027-ஆம் ஆண்டு உலகின் அதிக வெப்பமான ஆண்டாக மாறுவதற்கான வாய்ப்பும் இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
அல்நினோ வெப்பநிலையை மட்டும் மாற்றுவதில்லை. உலகின் பல பகுதிகளில் மழைப்பொழிவு முறையையும் மாற்றக்கூடும். இதனால் சில இடங்களில் அதிக மழை மற்றும் வெள்ளமும், மற்ற பகுதிகளில் வறட்சி மற்றும் கடுமையான வெப்பமும் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்தியா உள்ளிட்ட நாடுகளிலும் இதன் தாக்கத்தை விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
