மாமல்லபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கியக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளத் தொண்டர்கள் இப்போதிருந்தே தயாராக வேண்டும் என அறைகூவல் விடுத்தார். “தலைவர் விஜய்யின் பேச்சைத் தமிழகத்தின் 5 கோடி மக்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்” என்று குறிப்பிட்ட அவர், தேர்தலின்போது பூத் ஏஜெண்டுகள் (Booth Agents) வகிக்கப்போகும் பொறுப்பை மிக முக்கியமாகச் சுட்டிக்காட்டினார். வாக்குப்பதிவு முடியும் வரை பூத்தை விட்டு வெளியே வரக்கூடாது என்றும், ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் கள்ள ஓட்டுப் புகார்களைத் தடுக்க வேண்டியது தவெக வீரர்களின் கடமை என்றும் அவர் ஆவேசமாகத் தெரிவித்தார்.

​தொண்டர்கள் மட்டுமின்றி, பொதுமக்களும் இன்று தவெக-வின் ‘விசில்’ சின்னத்தை ஆசை ஆசையாய் அடிக்கத் தொடங்கிவிட்டதாகப் பெருமிதத்துடன் கூறிய ஆனந்த், கட்சியில் உழைப்பவர்களுக்கு மட்டுமே தகுதியான பதவிகள் வழங்கப்படும் எனத் தலைவர் நினைப்பதாகக் குறிப்பிட்டார். காலியாக உள்ள கட்சிப் பதவிகள் விரைவில் நிரப்பப்படும் என அறிவித்த அவர், 2026-ல் விஜய் அவர்களை முதலமைச்சர் நாற்காலியில் அமர வைப்பதே நமது ஒரே இலக்காக இருக்க வேண்டும் எனத் தொண்டர்களுக்கு உற்சாகமூட்டினார். “இனி எல்லாரும் நம்மைப் பற்றித்தான் பேசுவார்கள்” என்ற அவரது நம்பிக்கை, தவெக தொண்டர்களிடையே ஒரு புதிய எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.