டெல்லியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் ‘பராசக்தி’ படக்குழுவினர் பிரதமர் மோடியைச் சந்தித்தது குறித்து காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் விமர்சனம் செய்திருந்தார். இதற்குப் பதிலடி கொடுத்துள்ள பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், டெல்லியில் தமிழ் கலைஞர்களுக்குப் பிரதமர் மரியாதை அளிப்பதைத் தமிழுக்குக் கிடைத்த பெருமையாகப் பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும், வரும் 2026-ம் ஆண்டில் தமிழகம் முழுவதும் பா.ஜ.க-வின் குரல் ஓங்கி ஒலிக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். காங்கிரஸ் ஆட்சியில் தமிழுக்காகப் போராடியவர்கள் நசுக்கப்பட்டதை இந்தப் படம் பதிவு செய்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகக் குறிப்பிட்ட தமிழிசை, தணிக்கை வாரியம் இந்தப் படத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்கியதையும் சுட்டிக்காட்டினார்.
காங்கிரஸ் கட்சி திரைத்துறையினரைக் கைது செய்த வரலாற்றைக் கொண்டுள்ள நிலையில், பிரதமர் மோடி கலைஞர்களைக் கௌரவித்து வருவதாகவும், தற்போது இந்தப் படம் வெளியாகி இருப்பதால் படக்குழுவினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
