2026-ஆம் ஆண்டு பிறந்ததையொட்டி தமிழகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ள நிலையில், சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தின் முன்பு திரண்டிருந்த ஏராளமான ரசிகர்களை நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்தித்து தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு தினத்தில் ரசிகர்களைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டுள்ள அவர், இன்று அதிகாலை முதலே தனது வீட்டின் முன் காத்திருந்த ரசிகர்களை நோக்கி கையசைத்து உற்சாகப்படுத்தினார். வெள்ளை நிற உடையில் பால்கனியில் தோன்றி ரசிகர்களின் வாழ்த்துகளை ஏற்றுக் கொண்ட சூப்பர் ஸ்டார், அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டதோடு, அவர்களின் அன்பிற்கு நன்றியையும் வெளிப்படுத்தினார். தங்களின் அபிமான நடிகரை நேரில் கண்ட மகிழ்ச்சியில் ரசிகர்கள் ‘தலைவா தலைவா’ என முழக்கமிட்டு புத்தாண்டை உற்சாகத்துடன் கொண்டாடினர்.