அதிமுக சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்பும் கட்சி நிர்வாகிகள் இன்று முதல் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்ட நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து கருத்து தெரிவித்தார்.
ஜெயக்குமார் கூறியதாவது, “விருப்ப மனு விநியோகத்தின் முதல் நாளே பெரும் எழுச்சியை நாம் காண்கிறோம். இந்த எழுச்சியைப் பார்த்து, நிச்சயமாக ஒரு மகத்தான வெற்றியைப் பெறுவோம் என்று நம்புகிறோம். தேர்தலுக்கு இன்னும் 3 மாதங்கள் இருக்கிறது. அனைத்து கட்சிகளும், பாஜக கூட, அதிக சீட்களை கேட்கும். அந்தந்த கட்சியின் பலத்துக்கு ஏற்பவே சீட் ஒதுக்கீடு செய்யப்படும். தொகுதி பங்கீடு குறித்து உரிய நேரத்தில் கட்சித் தலைமை முடிவெடுக்கும்.”
மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடவில்லை என்பதைத் தெரிவித்த ஜெயக்குமார், “25 வருடம் வெற்றியை கொடுத்தது ராயபுரம் தொகுதி மக்கள். எனக்கு எப்போதும் ராயபுரம்தான். வெற்றியோ தோல்வியோ நான் எங்கும் எந்த கட்சிக்கும் மாறவில்லை. மேலும் பிரிந்து சென்றவர்களை இணைப்பது குறித்து நான் முடிவெடுக்க முடியாது, தலைமை கூற வேண்டும்,” என்றும் தெரிவித்துள்ளார்.
