ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளரான காவ்யா மாறன், தற்போது சர்வதேச கிரிக்கெட் வட்டாரத்தையே அதிரவைக்கும் ஒரு முடிவை எடுத்துள்ளார். இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ‘தி ஹண்ட்ரட்’ (The Hundred) தொடருக்கான ஏலத்தில், காவ்யா மாறனுக்குச் சொந்தமான ‘சன்ரைசர்ஸ் லீட்ஸ்’ அணி, பாகிஸ்தானைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் அப்ரார் அகமதுவை ஏலத்தில் எடுத்துள்ளது. சுமார் 1.90 லட்சம் பவுண்டுகள் (இந்திய மதிப்பில் சுமார் 2 கோடியே 34 லட்சம் ரூபாய்) கொடுத்து அவரைத் தனது அணியில் சேர்த்துள்ளார் காவ்யா. 2009-ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒரு இந்திய அணி உரிமையாளர், பாகிஸ்தான் வீரரை ஏலத்தில் எடுப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

​காவ்யா மாறனின் இந்த அதிரடி முடிவு தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் வீரர்களை இந்திய ஐபிஎல் அணிகள் புறக்கணித்து வரும் நிலையில், வெளிநாட்டுத் தொடராக இருந்தாலும் காவ்யா மாறன் இப்படி ஒரு ரிஸ்க் எடுத்தது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. குறிப்பாக, டி20 உலகக்கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக விக்கெட் எடுக்க முடியாமல் ரன்களை வாரி வழங்கிய அப்ரார் அகமது மீது இவ்வளவு பெரிய தொகையை முதலீடு செய்தது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. “பாகிஸ்தான் வீரரைத் தேர்ந்தெடுத்தது இந்தியாவிற்குள் காவ்யா மாறனுக்கு எதிரான எதிர்ப்புகளை உருவாக்குமா?” என்ற விவாதம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது.