தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக கட்சி 200 தொகுதிகளில் வெல்லும் என்று முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி மற்றும் திமுக அமைச்சர்கள் கூறி வருகிறார்கள். நேற்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தின் போது திமுக கண்டிப்பாக 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெல்லும் எனவும் இதற்காக இப்போது இருந்தே திமுக தொண்டர்கள் உழைக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார். இதற்கு தற்போது பாஜக கட்சியின் எம்எல்ஏ வானதி சீனிவாசன் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக கோவையில் செய்தியாளர்களை சந்தித்த வானதி சீனிவாசன் கூறியதாவது, மத்திய அரசு மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 20 லட்ச ரூபாய் வரை எந்தவித உத்தரவாதமும் இன்றி வழங்கும் கடன் உதவி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
மத்திய அரசின் திட்டங்களுக்கு முதலில் திமுக அரசு அனுமதி வழங்கிவிட்டு பின்னர் எதிர்க்கிறார்கள். மத்திய அரசு விஸ்வகர்மா திட்டத்தை அறிமுகப்படுத்திய போது அது குலத் தொழிலை ஊக்குவிக்கும் திட்டம் என்று கூறி திமுக அரசு எதிர்த்து விட்டு பின்னர் அதே திட்டத்தை கலைஞர் கைவினை திட்டம் என்ற பெயரில் அறிமுகப்படுத்தியுள்ளனர். சர்வதேச சந்தையில் கைவினைப் பொருட்களை விற்பனை செய்வதற்கான வாய்ப்புகள் விஸ்வகர்மா திட்டத்தின் மூலம் கிடைக்கும். நவோதயா பள்ளிகளில் ஹிந்தி கட்டாயம் இல்லை என்று கூறிய போதிலும் அதனை திமுக அரசு தமிழகத்தில் திறக்க எதிர்ப்பு தெரிவிக்கிறது. தமிழ்நாட்டை தங்களுடைய சுய லாபத்துக்காக திமுக தனித்தீவாக உருவாக்கி வருகிறது. இதன்மூலம் வருங்கால தலைமுறையினருக்கு மிகப்பெரிய துரோகத்தை திமுக செய்கிறது. இருப்பினும் இதைத் தாண்டி மத்திய அரசு பல நல்ல திட்டங்களை தமிழ்நாட்டிற்கு வழங்கி வருகிறது.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. சாத்தனூர் அணை படிப்படியாக திறக்கப்பட்டதாக கூறி பாராட்டு விழா நடத்தப்படும் நிலையில் அப்போது மக்கள் தத்தளித்ததை நாம் அனைவருமே பார்த்தோம். எனவே பாஜகவின் மீது எத்தனை பொய் குற்றசாட்டுகளை திமுக சுமத்தினாலும் கண்டிப்பாக அதற்கான மதிப்பெண் அடுத்து வரும் 2026 தேர்தலில் திமுகவுக்கு கிடைக்கும். முதல்வர் ஸ்டாலின் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று கூறியுள்ள நிலையில் அதில் உள்ள இரண்டு பூஜ்ஜியங்களை நீக்கினால் உள்ள தொகுதிகளில் மட்டும்தான் திமுக வெற்றி பெறுவதற்கான நிலை உள்ளது. மேலும் 2026 ஆம் ஆண்டு திமுக அலை எங்கு வீசுகிறது என்று பார்ப்போம் என்றார்.
