பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் ஒரு விசித்திரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. அங்கு நடைபெற்ற ஒரு திருமணத்தில், மணமகன் மோசடி செய்ததாகக் கூறி மணமகள் திருமணத்தை பாதியிலேயே நிறுத்தினார். திருமண நிச்சயதார்த்தத்தின் போது ஒரு இளைஞரைக் காட்டிவிட்டு, மணமேடையில் வேறொருவரை அமர வைத்து திருமணம் செய்ததாகப் பெண் வீட்டார் குற்றம் சாட்டினர்.
மேலும் இரவு முழுவதும் சடங்குகள் முடிந்த நிலையில், மறுநாள் காலை விடைபெறும் நேரத்தில் மணமகனின் உண்மை முகம் வெளிச்சத்திற்கு வந்தது. விடைபெறும் சடங்கின் போது, மணமகனின் அறிவுத்திறனைச் சோதிக்க எண்ணிய உறவினர் பெண் ஒருவர், அவரிடம் ஒரு 200 ரூபாய் நோட்டைக் காட்டி அது என்ன மதிப்பு என்று கேட்டுள்ளார். அதற்கு அந்த மணமகன் அது 2000 ரூபாய் நோட்டு என்று தவறாகப் பதிலளித்துள்ளார்.
இதனால் சாதாரண ரூபாய் நோட்டைக் கூட அடையாளம் காண முடியாத நபரைத் திருமணம் செய்ய மணமகள் மறுத்துவிட்டார். மணமகன் வீட்டார் ஏமாற்றிவிட்டதாகக் கூறி பெரும் பரபரப்பு ஏற்பட்டதை அடுத்து, காவல்துறையினர் தலையிட்டனர். இறுதியில் மணமகள் செல்ல மறுத்ததால், மணமகன் வீட்டார் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.
