ஜம்மு காஷ்மீரின் டோடா மாவட்டத்தில் உள்ள கண்ணி டாப் பகுதியில், 17 ராணுவ வீரர்களுடன் சென்ற வாகனம் சுமார் 200 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 4 வீரர்கள் உயிரிழந்தனர். மோசமான நிலையில் இருந்த பத்ர்வா-சம்பா சாலையில் சென்றுகொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தில் காயமடைந்த மற்ற வீரர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த 3 வீரர்கள் மேல் சிகிச்சைக்காக உதம்பூரில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

​ஜம்மு காஷ்மீர் மலைப்பகுதிகளில் ராணுவ வாகனங்கள் விபத்துக்குள்ளாவது இது முதல்முறை அல்ல. கடந்த மே மாதம் ராம்பன் பகுதியில் வாகனம் பள்ளத்தாக்கில் விழுந்ததில் 3 வீரர்களும், டிசம்பர் மாதம் பூஞ்ச் பகுதியில் நடந்த விபத்தில் 5 வீரர்களும் உயிரிழந்தனர். பனிமூட்டம், செங்குத்தான மலைப்பாதைகள் மற்றும் சாலைகளின் மோசமான நிலை போன்ற காரணங்களால் இதுபோன்ற தொடர் விபத்துகள் ஏற்படுவது மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.