வேலூர் மாவட்டத்தில் உள்ள பக்காலப்பல்லி கிராமத்தில் வீ.கோட்டா செல்லும் சாலையில் நயிம் என்பவர் கடந்த 6 வருடங்களாக உரம் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இங்கு துண்டு தொழில்களை நீராவியில் வேகவைத்து கூழாக தயாரிக்கின்றனர். பின்னர் அதனை காய வைத்து உரமாக்கி கேரள மாநிலத்தில் இருக்கும் ரப்பர் தோட்டங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். இந்த தொழிற்சாலையில் உள்ளுறை சேர்ந்த தொழிலாளர்கள் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் என மொத்தம் 12 பேர் வேலை பார்த்து வருகின்றனர்.

நேற்று மதியம் 3 நீராவி காலங்களில் தோல் துண்டுகளை கொதிக்க வைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக முதலில் இருந்த நீராவி கலன் வெடித்து சிதறியதால் ரோஹித்(14) என்ற சிறுவனுக்கும், தொழிற்சாலை உரிமையாளருக்கும் படுகாயம் ஏற்பட்டது. உடனடியாக இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதி மக்கள் கூறியதாவது, இந்த தொழிற்சாலையால் தினமும் நச்சுக்காற்று வீசி நோய்கள் ஏற்பட்டு பொதுமக்கள் சுவாச கோளாறால் அவதிப்படுகின்றனர். தொழிற்சாலையை சுற்றி விவசாய நிலங்கள் இருப்பதால் மரங்களில் தேங்காய் காய்ப்பதில்லை. மேலும் நீர் மாசடைந்து, மண் வளம் பாதிக்கிறது. எனவே மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை கொடுத்துள்ளனர்.