திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தாழையூத்து தென்கலம் பகுதியில் சிலர் சோப்பு விற்பனைக்காக வந்துள்ளனர். அவர்கள் ஒரு சோப்பு கம்பெனி பெயரில் சோப்பு வாங்கினால் குலுக்கல் முறையில் பரிசு வழங்குவோம் என கூறியுள்ளனர். மேலும் அவர்கள் பொதுமக்களின் பெயர், முகவரி, செல்போன் எண்ணை வாங்கி கொண்டு சென்றனர். இதனையடுத்து சோப்பு நிறுவனத்தின் வேளாளர் பேசுவது போல பொதுமக்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட ஒருவர் உங்களுக்கு தங்கக்காசு, டிவி, மோட்டார் சைக்கிள் பரிசு விழுந்துள்ளது.

அதனை அனுப்புவதற்கு 36 ஆயிரத்து 500 ரூபாய் வரியாக கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார். இதனை நம்பி பணத்தை அனுப்பி பலரும் ஏமார்ந்து விட்டனர். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த அய்யனார், காளீஸ்வரன், இசக்கிமுத்து ஆகிய 3 பேரையும் அதிரடியாக கைது செய்தனர்.

இவர்கள் செல்போன் கடைக்காரரான தங்கராஜிடம் செல்போன் சிம்கார்டு வாங்கி பயன்படுத்தியது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் தங்கராஜ் தனது கடையில் செல்போன் சிம்கார்டு வாங்க வருபவர்களின் அடையாள அட்டை, புகைப்படத்தை பயன்படுத்தி மோசடியாக 100-க்கும் மேற்பட்ட சிம்கார்டுகளை அதிக விலைக்கு விற்பனை செய்து பல லட்ச ரூபாய் சம்பாதித்ததும் தெரியவந்தது. இதனால் தங்கராஜையும் போலீசார் அதிரடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.