கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து காலிபிளவர் ஏற்றிக்கொண்டு சரக்கு வேன் மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த வேனை சங்கர் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். அவருடன் சுமை தூக்கும் தொழிலாளர்களான தர்ஷன், கோவிந்தராஜ் உடன் இருந்தனர். நேற்று அதிகாலை திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரங்கநாதபுரம் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது வேனின் பின்பக்க டயர் பஞ்சரானது.

இதனால் சங்கர் வேனை சாலை ஓரமாக நிறுத்தியுள்ளார். இதனையடுத்து சங்கரும், தர்ஷனும் பஞ்சரான டயரை கழற்றி மாட்டிக்கொண்டிருந்தனர். கோவிந்தராஜ் அருகில் இருந்துள்ளார். அப்போது மும்பையில் இருந்து தூத்துக்குடி நோக்கி வெங்காயம் ஏற்றி சென்ற லாரி சரக்கு வேன் பின்புறம் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் சங்கரும், தர்ஷனும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அதிர்ஷ்டவசமாக கோவிந்தராஜ் காயமின்றி உயிர் தப்பினார்.

இதனையடுத்து உயிருக்கு போராடி கொண்டிருந்த லாரி டிரைவர் மாரிமுத்துவை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சங்கர் மற்றும் தர்ஷனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.