ஈரோடு மாவட்டத்தில் உள்ள தனியார் கூரியர் நிறுவனத்தில் சக்திவேல் என்பவர் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு எலக்ட்ரீசியரான தமிழ் செல்வன் என்ற நண்பர் இருந்துள்ளார். இந்நிலையில் தான் புதிதாக வாங்கிய விவசாய தோட்டத்தை பார்ப்பதற்காக சக்திவேல் தனது நண்பன் தமிழ்செல்வனுடன் மோட்டார் சைக்கிளில் செம்பூத்தான்பாளையம் நோக்கி சென்றார். அங்கு தோட்டத்தை பார்த்துவிட்டு மீண்டும் அவர்கள் ஈரோடு புறப்பட்டனர். இந்நிலையில் செம்பூத்தாம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது எதிரே வந்த கான்கிரீட் கலவை எந்திர லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

மேலும் லாரி உடனே நிற்காமல் சுமார் 50 மீட்டர் தூரம் வரை மோட்டார் சைக்கிளை இழுத்து சென்றது. இதனால் சக்திவேல், தமிழ்ச்செல்வன் ஆகிய இருவரும் உயிரிழந்தனர். அவர்களது உடல்களும் இழுத்து செல்லப்பட்டது. இதுகுறித்து அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வாலிபர்களின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் லாரி டிரைவரான திவ்யநாதன் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.