கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒண்டிப்புதூரில் வியாபாரியான சிவலிங்கம்(54) என்பவர் வசித்து வருகிறார். இவர் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று சிவலிங்கத்தின் கடைக்கு சென்ற இரண்டு பேர் தங்களை போலீஸ்காரர்கள் என அறிமுகப்படுத்திக் கொண்டனர். இதனையடுத்து உங்களது கடையில் திருட்டுப் பொருட்களை வாங்கி விற்பனை செய்வதாக புகார் வந்தது.

அது தொடர்பாக விசாரிக்க வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிவலிங்கம் நான் திருட்டுப் பொருட்களை வாங்குவதில்லை என கூறியுள்ளார். உடனே இருவரும் விசாரிக்க வந்ததற்கு 1000 ரூபாய் தர வேண்டும் என கேட்டு சிவலிங்கத்தை மிரட்டி உள்ளனர். இதனால் அச்சத்தில் சிவலிங்கம் பணத்தை கொடுத்தார். அதே சமயம் இரும்பு கடை சங்கத்தை சேர்ந்த ஒருவர் அங்கு சென்று இரண்டு பேரிடமும் விசாரித்த போது இருவரும் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.

இதனால் சந்தேகமடைந்த அவர் இரண்டு பேரையும் பிடித்து சிங்காநல்லூர் போலீசில் ஒப்படைத்தார். பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் விருதுநகரை சேர்ந்த தங்கமணி, கோவையைச் சேர்ந்த பூபதி குமார் என்பது தெரியவந்தது. இருவரும் போலீஸ் என கூறி மிரட்டி பணம் பறித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிந்த போலீசார் பூபதி மற்றும் தங்கமணி ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.