மலைப்பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் பிடித்தமான உணவாக மேகி நூடுல்ஸ் திகழ்கிறது. இந்நிலையில், மலைப்பகுதியில் சிறிய கடை அமைத்து மேகி விற்பனை செய்வதன் மூலம் ஒரு நாளைக்கு எவ்வளவு வருவாய் ஈட்ட முடியும் என்பது குறித்து சமூக வலைதளவாசி ஒருவர் வெளியிட்ட காணொலி தற்போது வைரலாகி வருகிறது.
பாதல் தாக்கூர் என்ற அந்த இளைஞர், ஒரு மேசை மற்றும் எரிவாயு உருளையுடன் கூடிய சிறிய தற்காலிகக் கடையை மலைப்பகுதியில் அமைத்தார். அங்கு ஒரு தட்டு மேகி 70 ரூபாய்க்கும், பாலாடை கலந்த மேகி 100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாக இருந்ததால், வெறும் நான்கு முதல் ஐந்து மணி நேரத்திலேயே 200 தட்டுகளுக்கு மேல் விற்பனையானது.
View this post on Instagram
ஒரு நாள் முடிவில் சுமார் 350 தட்டுகள் வரை விற்பனை செய்த அவர், அன்றைய மொத்த வருவாயாக 21000 ரூபாய் ஈட்டியதாகத் தெரிவித்துள்ளார். இதிலிருந்து மேகி பாக்கெட்டுகள், எரிவாயு மற்றும் இதர செலவுகளைக் கழித்தாலும் கணிசமான லாபம் கிடைக்கும் என்பது உறுதியாகிறது.
மாதம் முழுவதும் இதேபோல் விற்பனை நடைபெற்றால் சுமார் 6 லட்சம் ரூபாய் வரை வருவாய் ஈட்ட வாய்ப்புள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த காணொலி இணையத்தில் 35 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ள நிலையில், பலரும் தங்களது வேலையை விட்டுவிட்டு இத்தகைய தொழிலைத் தொடங்கலாமா என்று வியப்புடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
