விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அயினம்பாளையம் பழைய காலனி மாரியம்மன் கோவில் தெருவில் கீதா என்பவர் வசித்து வருகிறார். இவர் திருவாமாத்தூர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மகளிர் குழுவின் முன்னாள் செயலாளராக இருந்துள்ளார். இந்நிலையில் மகளிர் குழுவுக்கு சொந்தமான பணம் 2 லட்சத்து 5 ஆயிரத்து 200 ரூபாயை வங்கியில் செலுத்துவதற்காக தனியார் பேருந்தில் கீதா விழுப்புரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அந்த பேருந்து விழுப்புரம் நான்கு முனை சந்திப்பு அருகே நின்றது.

இந்நிலையில் கீழே இறங்கிய கீதா தனது கையில் வைத்திருந்த பையை திறந்து பார்த்தார். அப்போது பணமும், 4 வங்கி கணக்கு புத்தகங்களும் காணாமல் போனதை கண்டு கீதா அதிர்ச்சி அடைந்தார். ஓடும் பேருந்தில் கூட்ட நெரிசலில் மர்ம நபர் யாரோ கீதா பையில் இருந்த பணத்தையும், வங்கி கணக்கையும் திருடியது தெரியவந்தது. இதுகுறித்து கீதா விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.