விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தாயில்பட்டி கணஞ்சாம்பட்டி கிராமத்தில் மாரியப்பன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆளை அமைந்துள்ளது. இந்த ஆலையை சிவகாசியை சேர்ந்த கந்தசாமி என்பவர் நடத்தி வருகின்றனர். இங்குள்ள 41 அறைகளில் 38 பேர் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் மாலை 3 மணிக்கு ராக்கெட் வெடி மற்றும் சிறிய பிளாஸ்டிக் பத்து போன்ற டப்பாக்களில் பட்டாசுகளுக்கான மருந்து செலுத்தும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அப்போது உராய்வு காரணமாக திடீரென பயங்கர சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்து சிதறி தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதில் 8 அறைகள் இடிந்து தரைமட்டமானது. இதனால் மற்ற அறைகளில் இருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர்.

இந்த விபத்தில் சத்திரப்பட்டியை சேர்ந்த முனீஸ்வரி(30) மற்றும் ஒரு ஆண் என இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பிரதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்த தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயமடைந்த மாரிமுத்து, மகேஸ்வரன், பாண்டியன், குருசாமி உட்பட 16 பேரையும் மீட்டு அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அறிந்த விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள், சிவகாசி வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.