விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் மாசி பெருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் தேரோட்டத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவரும், வெயிலின் தாக்கத்தால் மற்றொருவரும் மயங்கி விழுந்து உயிரிழந்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் வேலூர் காந்தி ரோட்டை சேர்ந்த விநாயகம் என்பவர் தேரை வடம் பிடித்து இழுத்த போது கூட்ட நெரிசலில் சிக்கி கீழே விழுந்தார்.

இதனை கவனிக்காத பக்தர்கள் அவரை மிதித்து சென்றதால் விநாயகம் பரிதாபமாக உயிரிழந்தார். இதே போல் வெயில் சுட்டரித்ததால் கோடிக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இரண்டு பேரின் உடல்களையும் மீட்டு போலீசார் செஞ்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.