
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக செயல்பட்டு வந்தவர் சந்திர சூட். இவர் அரசினால் வழங்கப்பட்ட பங்களாவில் தனது மனைவி மற்றும் 2 மகள்களுடன் வசித்து வந்தார். இந்நிலையில் நீதிபதி பதவியிலிருந்து கடந்த ஆண்டு இறுதியில் ஓய்வு பெற்ற இவர் தற்போது வரை அரசு பங்களாவிலேயே தங்கி வருகிறார். இதனால் உச்ச நீதிமன்றம் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்திற்கு கடிதம் அனுப்பியது.
அந்த கடிதத்தில் ”மே 31ஆம் தேதியுடன் சந்திர சூட்டுக்கு வழங்கப்பட்ட அரசு பங்களாவில் வசிக்கும் அனுமதி முடிவடைந்துவிட்டது. தற்போது வரை அவர் பங்களாவை காலி செய்யவில்லை. எனவே சந்திர சூட்டை எண் 5, கிருஷ்ணா மேனன் மார்க் பங்களாவிலிருந்து வெளியேற வைக்க வேண்டும். அதன் பின் பங்களாவை அரசிடம் ஒப்படைக்க வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.
இது தொடர்பாக முன்னாள் தலைமை நீதிபதி சென்ற சூட் பேசிய போது, “தனது மகள்கள் மஹி மற்றும் பிரியங்கா ஆகிய 2 பேருக்கும் நெமிலி மயோபதி என்னும் மரபணு சிக்கல் உள்ளது. இது எலும்பு மற்றும் தசைகளில் பாதிப்பை ஏற்படுத்தும். இதற்காக அவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த குறைபாட்டினால் அவர்களுக்கு தசை சிதைவு ஏற்பட்டு சுவாச அமைப்பை கடுமையாக பாதிக்க செய்கிறது.
அவர்கள் 2 பேரும் தினசரி பல்வேறு பயிற்சிகள் எடுத்து வருகிறார்கள். அவர்களின் வசதிக்கேற்ப இந்த பங்களா வடிவமைக்கப்பட்டுள்ளது. குளியல் அறைகள் முதல் வீட்டில் உள்ள அனைத்தும் அவர்களின் நிலைமைக்கு ஏற்ப உள்ளது. அரசாங்கம் வழங்கிய தற்காலிக தங்குமிடம் 2 வருடமாக பயன்படுத்தப்படாமல் இருப்பதால் தற்போது அதனை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
அந்த வீடு தயாரானவுடன் நான் இங்கிருந்து வெளியேறி விடுவேன். எனது மகள்களை சோர்வடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். டெல்லியில் கல்வி பயின்று வந்த அவர்கள் தற்போது அதனை வீட்டிலேயே தொடர்கின்றனர். அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கைகளை பக்கத்தில் இருந்தே பார்த்துக் கொள்வதற்கு எனது மனைவி அவர்களுடன் இருக்கிறார். நானும் எனது மகள்களுடன் வீட்டில் நேரத்தை செலவிட விரும்புகிறேன்” என்று கூறினார்.