ஈரானின் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28 அன்று நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, ஏப்ரல் 8 முதல் இருவார கால போர் நிறுத்தம் அமலில் இருந்தது. இந்நிலையில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பாகிஸ்தானில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தை எவ்வித உடன்பாடும் இன்றி, 21 மணி நேர இழுபறிக்குப் பின் தோல்வியில் முடிவடைந்துள்ளது.

முதற்கட்ட பேச்சுவார்த்தையைப் பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்த நிலையில், அடுத்தடுத்த பேச்சுவார்த்தைகளைச் சீனா மத்தியஸ்தம் செய்ய ஈரான்வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளது. அதேநேரம், அமெரிக்கா தங்களுக்குத் தவறான நம்பிக்கையை ஏற்படுத்த முயன்றால், முழு அளவிலான போருக்கும் தயாராக இருப்பதாக ஈரான் அதிரடியாக எச்சரித்துள்ளது.

மறுபுறம், சீனப் பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், உலக நாடுகளின் முக்கிய வர்த்தகப் பாதையான ஹார்மூஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்பட வேண்டும் என்பதில் சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் உடன்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், கடந்தஇரண்டரை வாரங்களாக ஈரானைச் சுற்றி அமெரிக்கக் கப்பல்கள் மேற்கொண்டு வரும் முற்றுகையால், ஈரானுக்கு நாளொன்றுக்கு 50 கோடி அமெரிக்க டாலர் வர்த்தக இழப்பு ஏற்பட்டு வருவதாகவும், ஈரானிடம் அணு ஆயுதம் இருக்கக் கூடாது என்பதில் தாங்கள் உறுதியாக இருப்பதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, பேச்சுவார்த்தைகளை முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டு, ஈரான் மீது வான்வழியாகக் கடுமையான தாக்குதலைத் தொடுக்க ‘தாக்குதல் 2.0’ என்ற பிரம்மாண்ட திட்டத்தை டிரம்ப் வகுத்து வருவதாகத் ஒரு இதழ் வெளியிட்டுள்ள செய்தி உலகளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.