ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்தவர் தேசிங்குராஜா. இவர் மதுரையில் உள்ள உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி டெய்சி. இவர்களுக்கு லெமோரியா என்ற இரண்டு வயது பெண் குழந்தை உள்ளது. குழந்தையின் மாமா சஞ்சய் நேற்று மாலை குழந்தையுடன் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது கஞ்சா போதையில் இருந்த சஞ்சய் திடீரென குழந்தையை வீட்டின் பின்புறம் தூக்கி சென்று அங்கு வைத்து குழந்தையின் கழுத்தை துண்டாக அறுத்து கொலை செய்துள்ளார். பின்பு குழந்தையின் உடல்களை ஆங்காங்கே வீசிவிட்டு தலையை ஊரணியில் வீசி உள்ளார். இதனையடுத்து சஞ்சய் காவல் நிலையத்திற்கு சென்று குழந்தையை கொன்றதாக சரணடைந்தார்.
இதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி ஊரணியில் வீசப்பட்ட குழந்தையின் தலையை தீயணைப்பு துறையினரை வரவழைத்து மீட்டனர். பின்பு குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சஞ்சய் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்ததில் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. அதாவது சஞ்சய் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருந்ததால் அவர் வழக்கறிஞர் தேசிங்கு ராஜாவிடம் ஜாமின் பெற்று தருமாறு உதவி கேட்டுள்ளார். ஆனால் சஞ்சய் மனநலம் பாதிக்கப்பட்டவர் என மருத்துவ சான்று ஆதாரத்துடன் தேசிங்குராஜா நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.
இதனால் சஞ்சய் உறவினர்கள் அவரை பைத்தியக்காரன் என கேலி கிண்டல் செய்துள்ளனர். எனவே தேசிங்கு ராஜாவை பழிவாங்கும் எண்ணத்தில் குழந்தையை கொடூரமாக கொலை செய்ததாக சஞ்சய் ஒப்புக்கொண்டார். இந்த சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
