ஆந்திரா மாநிலத்தில் உள்ள தர்மண்டலம் பகுதியை சேர்ந்தவர்கள் சுரேஷ்- அஞ்சலி தம்பதியினர். இவர்களுக்கு ரூத்(6), சமீரா(4) என்ற இரண்டு மகள்களும், எஸ்யூ(2) என்ற மகனும், கங்கோத்ரி என்ற இரண்டு மாத பெண் குழந்தையும் இருந்துள்ளனர். கடந்த 10 நாட்களாக சுரேஷ் தனது குடும்பத்துடன் திருவள்ளூர் பெரியகுப்பம் ரயில்வே மேம்பாலம் கீழ் தங்கி இருந்து பிளாஸ்டிக் மற்றும் பேப்பர் பொறுக்கி இரும்பு கடையில் விற்பனை செய்யும் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் அதிகாலை 2 மணிக்கு இரண்டு மாத கைக்குழந்தை பசியில் அழுதது.

அப்போது போதையில் இருந்து சுரேஷ் தனது மனைவியிடம் குழந்தைக்கு பால் கொடு என கூறினார். ஆனால் அஞ்சலி எழுந்து பால் கொடுக்க தாமதித்ததாக கூறப்படுகிறது. மேலும் குழந்தை அழுது கொண்டே இருந்ததால் கோபமடைந்த சுரேஷ் தனது 2 மாத குழந்தையின் காலை பிடித்து தூக்கி தரையில் ஓங்கி அடித்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அஞ்சலி படுகாயமடைந்த தனது குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சுரேஷை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.