இருதரப்பு தொடரில் விராட் கோலியின் பெரிய சாதனையை ருதுராஜ் கெய்க்வாட்  முறியடிக்க வாய்ப்புள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டி20 போட்டியில் இந்திய அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.  இதனால் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. சூர்யகுமார் தலைமையிலான முதல் தொடர் வெற்றி இதுவாகும். இதன் மூலம் சொந்த மண்ணில் தொடர்ந்து 14வது டி20 தொடரை வென்றது டீம் இந்தியா. இந்த தொடரின் 5வது மற்றும் கடைசி போட்டி டிசம்பர் 3ம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் மிகப்பெரிய சாதனை முறியடிக்கப்படலாம். விராட்டின் இந்த சாதனையை 26 வயது வீரர் ஒருவர் முறியடிக்க மிக அருகில் உள்ளார்.

விராட் கோலியின் இந்த பெரிய சாதனை  முறியடிக்கப்படுமா?

இருதரப்பு டி20 தொடரில் இந்திய அணிக்காக அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். ஆனால் இளம் பேட்ஸ்மேன் ருதுராஜ் கெய்க்வாட் இந்த சாதனையை முறியடிக்க மிக அருகில் வந்துள்ளார். எம் சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் 5வது டி20 போட்டியில் ருதுராஜ் 19 ரன்கள் எடுத்தால், டி20 இருதரப்பு தொடரில் இந்தியாவுக்காக அதிக ரன் குவித்த வீரர் என்ற பெருமையை பெறுவார்.

ருதுராஜ் சிறப்பான ஃபார்மில் உள்ளார் :

2021-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விராட் கோலி 231 ரன்கள் எடுத்திருந்தார். அதே நேரத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரின் முதல் 4 ஆட்டங்களில் ருதுராஜ் கெய்க்வாட் 213 ரன்கள் எடுத்துள்ளார். இதில் அவர் ஒரு சதம் மற்றும் ஒரு அரை சதம் அடித்துள்ளார். அவர் இந்த ரன்களை சராசரியாக 71.00 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 166.40 இல் எடுத்துள்ளார். இதுமட்டுமின்றி தொடரின் முதல் போட்டியில் பந்து கூட விளையாடாமல் ரன் அவுட் ஆனார். விராட் கோலியை முறியடிக்க ருதுராஜிக்கு 19 ரன்கள் தேவைப்படுகிறது.

இருதரப்பு டி20 தொடரில் இந்திய அணிக்காக அதிக ரன்கள் எடுத்தது :

231 ரன்கள் – விராட் கோலி vs இங்கிலாந்து

224 ரன்கள்- கேஎல் ராகுல் vs நியூசிலாந்து

213 ரன்கள்- ருதுராஜ் கெய்க்வாட் vs ஆஸ்திரேலியா*

206 ரன்கள்- இஷான் கிஷன் vs தென் ஆப்பிரிக்கா

204 ரன்கள்- ஷ்ரேயாஸ் ஐயர் vs இலங்கை

3வது டி20 போட்டியில் சதம் அடித்தார் :

இந்த தொடரின் 3வது போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் 57 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 123 ரன்கள் எடுத்தார். இதன் போது அவர் 13 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களை விளாசினார். இதன் மூலம் டி20யில் மிகப்பெரிய இன்னிங்ஸ் ஆடிய 2வது இந்திய பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்தார். முன்னதாக இந்த சாதனை விராட் கோலியின் பெயரிலும் இருந்தது. விராட் கோலி டி20யில் ஆட்டமிழக்காமல் 122 ரன்கள் எடுத்துள்ளார்.