பஞ்சாபைச் சேர்ந்த தம்பதிக்கு குழந்தை வளர்ப்பதற்காக, பீகாரில் 3 வயது சிறுவனைக் கடத்தி ரூ.3 லட்சத்திற்கு விற்க முயன்ற வழக்கில் பெண் உள்பட 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.பஞ்சாப் மாநிலம் ஜலந்தரைச் சேர்ந்த ஹர்ஜேந்தர் குமார் என்பவரின் 18 வயது மகன், கடந்த 2025-ஆம் ஆண்டு நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதனால் அவரது மனைவி கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளானார். குடும்பத்தினர் மற்றும் அண்டை வீட்டாரின் ஆலோசனையின் பேரில், வேறொரு குழந்தையை தத்தெடுக்க ஹர்ஜேந்தர் முடிவெடுத்தார்.

அப்போது, அவர்களின் வீட்டில் வேலை செய்து வந்த நீலம் என்ற பெண், பீகாரில் இருந்து குழந்தையை ஏற்பாடு செய்து தருவதாகவும், அதற்கு ரூ.3 லட்சம் செலவாகும் என்றும் கூறியுள்ளார். இதற்கு ஹர்ஜேந்தரின் குடும்பமும் சம்மதித்துள்ளது.இதனைத் தொடர்ந்து, பீகாரின் முங்கேர் பகுதியில் உள்ள லால் தர்வாஜா என்ற இடத்தை சேர்ந்த நபரை நீலம் தொடர்பு கொண்டுள்ளார். அந்த நபர் தனது பக்கத்து வீட்டில் வசித்து வந்த 3 வயது சிறுவனின் புகைப்படத்தை எடுத்து அனுப்பியுள்ளார். புகைப்படத்தைப் பார்த்து பிடித்துப்போகவே, ரூ.3 லட்சத்திற்கு சிறுவனை விற்றுவிட திட்டம் தீட்டப்பட்டது.

சிறுவனைக் கடத்துவதற்காக பஞ்சாபில் இருந்து காரில் புறப்பட்ட ஹர்ஜேந்தரின் குடும்பத்தினர் பாட்னாவை வந்தடைந்தனர். கடந்த புதன்கிழமை, அந்தப் இடைத்தரகரும் அவரது 15 வயது மகளும் சேர்ந்து, தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனைத் தூக்கிக்கொண்டு வந்து காரில் ஏற்றியுள்ளனர். பின்னர் கார் பஞ்சாப் நோக்கி அதிவேகமாகப் புறப்பட்டது.சிறுவன் காணாமல் போனது குறித்து முங்கேர் காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், அங்குள்ள CCTV காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், பக்கத்து வீட்டு நபரும் அவரது மகளும் சிறுவனை அழைத்துச் செல்வது உறுதியானது.

அவர்களைப் பிடித்து விசாரணை நடத்தியதில், வேலைக்காரி நீலத்தின் தொலைபேசி எண் கிடைத்தது. அவரது செல்லிடப்பேசி சிக்னலை (Mobile Location) ஆய்வு செய்தபோது, அவர்கள் போஜ்பூர் மாவட்டம் ஆரா நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருப்பது தெரியவந்தது.
உடனடியாக போஜ்பூர் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, நெடுஞ்சாலையில் கார் மறிக்கப்பட்டது. காரில் இருந்த சிறுவன் பாதுகாப்பாக ட்கப்பட்டு, அவனது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டான்.இந்தக் கடத்தல் சம்பவம் தொடர்பாக பஞ்சாபைச் சேர்ந்த ஹர்ஜேந்தர் குமார், டிரைவர் ராஜ்குமார், ராமாஜித் கவுர், நிர்மலா கவுர், பீகாரைச் சேர்ந்த நீலம், இடைத்தரகர் மற்றும் அவரது 15 வயது மகள் ஆகிய 7 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து ரூ.2.20 லட்சம் ரொக்கப் பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.
ஹர்ஜேந்தர் உண்மையிலேயே தத்தெடுக்கும் நோக்கில் தான் இதில் ஈடுபட்டாரா அல்லது இதன் பின்னணியில் குழந்தைகள் கடத்தல் கும்பல் ஏதேனும் இயங்கி வருகிறதா என்ற கோணத்தில் முங்கேர் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய சங்கீதா குமாரி என்ற பெண்ணையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.