கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா மாவட்டத்தில், கள்ளக்காதல் விவகாரத்தில் ஏற்பட்ட மோதலில், சமாதானம் பேசச் சென்ற ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்த ஜோதிடர் மற்றும் அவரது காதலி உட்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
அதாவது உத்தர கன்னடா மாவட்டத்தைச் சேர்ந்தவர் மகேஷ் நாயக். இவரது மனைவி சுசித்ரா. இவர்களுக்கு 18 வயதில் ஒரு மகளும், 16 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த ஜோதிடர் கமலாகர் பட் என்பவருடன் சுசித்ராவுக்கு பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி பல்வேறு இடங்களுக்குச் சென்று வந்துள்ளனர். இதனை மகேஷ் நாயக்கின் 18 வயது மகள் நேரில் பார்த்துத் தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார்.
மகள் கூறியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மகேஷ் நாயக், தனது மனைவியைக் கண்டித்துள்ளார். இருப்பினும் சுசித்ரா தனது போக்கை மாற்றிக்கொள்ளாததால், காவல் நிலையத்தில் மகேஷ் புகார் அளித்தார். போலீசார் இரு தரப்பையும் அழைத்து எச்சரித்து அனுப்பி வைத்தனர். இதனால் ஆத்திரமடைந்த சுசித்ரா, தனது கணவருடன் கோபித்துக்கொண்டு பெற்றோர் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.
இந்நிலையில், சுசித்ராவின் தந்தை பேச்சுவார்த்தை நடத்த வருமாறு மகேஷ் நாயக்கை அழைத்துள்ளார். இதன்பேரில் மகேஷ் நாயக், தனது தம்பி வசந்த் நாயக் மற்றும் உறவினர் குமார் ஆகியோருடன் சுசித்ராவின் தந்தை வீட்டுக்குச் சென்றார். அங்கு சுசித்ரா, ஜோதிடர் கமலாகர் பட் மற்றும் அவரது ஆதரவாளர்கள் என 7 பேர் காத்திருந்தனர்.
சமாதானப் பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருந்தபோதே இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. இதில் ஆத்திரமடைந்த சுசித்ரா மற்றும் ஜோதிடர் தரப்பினர், மறைத்து வைத்திருந்த கத்தியால் மகேஷ் நாயக் உள்ளிட்ட மூவரையும் சரமாரியாகத் தாக்கினர்.
இந்த பயங்கர மோதலில் மகேஷ் நாயக்கின் தம்பி வசந்த் நாயக் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். படுகாயமடைந்த மகேஷ் நாயக் மற்றும் குமார் ஆகியோர் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், சுசித்ரா, ஜோதிடர் கமலாகர் பட் மற்றும் சுசித்ராவின் தந்தை உள்ளிட்ட 7 பேரையும் அதிரடியாகக் கைது செய்தனர். கள்ளக்காதல் விவகாரத்தில் தம்பி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
