அரியானா மாநிலத்தில் கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் மாரடைப்பு மற்றும் இதயச் செயலிழப்பு காரணமாக 17,973 பேர் உயிரிழந்திருப்பதாக அந்த மாநிலச் சட்டமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் 18 முதல் 45 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் என்பது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, இதயப் பாதிப்புகளால் ஏற்பட்ட உயிரிழப்புகள் ஆண்டுதோறும் அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது. அதன்படி  2020-ல்  2,394 பேர், 2021: 3,188 பேர்,  2022: 2,796 பேர், 2023: 2,886 பேர், 2024: 3,063 பேர், 2025: 3,255 பேர், 2026 (ஜனவரி மட்டும்): 391 பேர். இதன்படி, கடந்த 2020 ஜனவரி முதல் 2026 ஜனவரி வரையிலான காலகட்டத்தில் ஒட்டுமொத்தமாக 17,973 பேர் உயிரிழந்துள்ளனர்.

இளம் வயதினர் மாரடைப்பிற்கு ஆளாவதற்கு மாறிவரும் வாழ்க்கை முறை, அதீத மன அழுத்தம் மற்றும் தவறான உணவுப் பழக்கவழக்கங்களே முக்கியக் காரணங்களாக நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். மேலும், புகைப்பிடித்தல், மது அருந்துதல், உடல் உழைப்பின்மை மற்றும் உடல் பருமன் ஆகியவையும் இதயப் பாதிப்புகளைத் தூண்டுவதாகக் கூறப்படுகிறது. இதய சம்பந்தமான பிரச்சனைகளை ஆரம்பக்காலத்திலேயே கண்டறிவதன் மூலமும், ஆரோக்கியமான வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலமும் தடுக்க முடியும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மேலும் இளைஞர்கள் தங்களது ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பின் அளவைத் (Cholesterol) சீரான இடைவெளியில் பரிசோதிக்க வேண்டும். தினசரி உடற்பயிற்சி மற்றும் சத்தான உணவுகளை உட்கொள்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். நெஞ்சு வலி அல்லது மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.