உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் 14 வயது சிறுவன் லக்ஷயாவை, கிரிப்டோகரன்சி முதலீட்டிற்காக கடன் வாங்கிய பணத்தை திருப்பி செலுத்த விரும்பாததால், அவரது உறவினரால் கழுத்து நெறித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செப்டம்பர் 16 ஆம் தேதி இரவு லக்ஷயா மாயமானதை அடுத்து இந்த வழக்கு வெளிச்சத்திற்கு வந்தது. குற்றவாளியான யுவராஜ் என்ற யாஷ் பிரஜாபதி, விமானப் பணியாளராக பணிபுரிந்து கிரிப்டோகரன்சி வர்த்தகத்தில் ஈடுபட்டவர்.
விசாரணையில், செப்டம்பர் 16 அன்று யுவராஜ், லக்ஷயாவை திரைப்படம் பார்ப்பதற்கு அழைப்பதாக ஏமாற்றி, டெல்லியின் ப்ரீத் விஹார் பகுதியில் உள்ள திரையரங்கத்திற்கு அழைத்துச் சென்றது தெரியவந்தது. அங்கு, அவர் சிறுவனை கழுத்து நெறித்து கொலை செய்து, பின்னர் செங்கற்களால் அடித்து உடலை அங்கேயே விட்டுவிட்டார். கொலையை முடித்த பிறகு, யுவராஜ் V3S மாலுக்கு சென்று ஒரு திரைப்படம் பார்த்துவிட்டு, பின்னர் வீட்டிற்கு திரும்பி, காணாமல் போன சிறுவனைத் தேடுவதற்காக குடும்பத்துடன் இணைந்து நடித்தார்.
யுவராஜ், தனது மாமா மன்பீரிடமிருந்து சுமார் மூன்று லட்சம் ரூபாய் கடன் வாங்கி கிரிப்டோ முதலீட்டில் ஈடுபட்டிருந்தார். அவர் லாபம் ஈட்டியிருந்தாலும், மாமா 50,000 ரூபாய் திருப்பிக் கேட்டபோது, பணத்தை திருப்பி செலுத்தாமல் இருக்க, தனது உறவினரான சிறுவனை கொலை செய்யும் கொடூரத் திட்டத்தை தீட்டியதாக போலீஸார் தெரிவித்தனர்.
கோடா காவல் நிலையத்தில் சிறுவன் மாயமானதாக புகார் பதிவு செய்யப்பட்ட பிறகு, விசாரணை தொடங்கப்பட்டது. சிசிடிவி காட்சிகள், மொபைல் டிராக்கிங் மற்றும் தகவல் அளித்தவரின் உதவியுடன், யுவராஜ் சிறுவனுடன் கடைசியாக இருந்தார் என்பது தெரியவந்தது. அவர் காவலில் எடுக்கப்பட்டு, நடத்திய விசாரணையில் கொலையை ஒப்புக்கொண்டார். இந்திராபுரம் உதவி காவல் ஆணையர் அபிஷேக் ஸ்ரீவாஸ்தவா, குற்றவாளி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாக உறுதிப்படுத்தினார். இந்த சம்பவம் கிராம மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
