ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில், திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த 16 வயது சிறுமியை 19 வயது இளைஞன் கழுத்தறுத்துக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடப்பா மாவட்டம் அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் (19) என்ற இளைஞன், கடந்த சில நாட்களாக அச்சிறுமியை காதலிப்பதாகக் கூறி திருமணத்திற்கு வற்புறுத்தி வந்துள்ளான். சிறுமியைப் பின்தொடர்ந்து சென்று அடிக்கடி தொந்தரவு கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
வெங்கடேஷின் திருமண ஆசைக்கு அந்தச் சிறுமி உடன்படவில்லை. “என் பெற்றோர் யாருக்குப் திருமணம் செய்து வைக்கிறார்களோ, அவரைத்தான் நான் மணப்பேன்” என்று சிறுமி அவனிடம் உறுதியாகத் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வெங்கடேஷ், சிறுமி மீது வன்மத்தை வளர்த்துக்கொண்டான். கடந்த வெள்ளிக்கிழமை காலை சிறுமியின் பெற்றோர் வெளியில் சென்றிருந்தனர். சிறுமி வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த வெங்கடேஷ், அங்கு சென்று மீண்டும் திருமணப் பேச்சை எடுத்துள்ளான். அப்போதும் சிறுமி மறுக்கவே, ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்ற அவன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சிறுமியின் கழுத்தை அறுத்துள்ளான்.
சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் வெங்கடேஷ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான். ரத்த வெள்ளத்தில் கிடந்த சிறுமியை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இந்தக் கொடூரச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார், தலைமறைவாக இருந்த வெங்கடேஷை சில மணிநேரங்களிலேயே கைது செய்தனர். இச்சம்பவத்தால் ஆத்திரமடைந்த சிறுமியின் உறவினர்கள் மற்றும் பெண்கள் அமைப்பினர் காஜிப்பேட்டையில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் குற்றவாளிக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
