குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்தில், சாதாரண குடும்பத் தகராறில் கணவரை மனைவியே கல்லால் அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் அலிராஜ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த அர்விந்த் நாயக் (24), அவரது மனைவி ரேகா நாயக் (32) ஆகிய இருவரும் பிழைப்பு தேடி குஜராத் மாநிலம் திலக்வாடா பகுதிக்கு வந்தனர். அங்குள்ள சாஹிபுரா பகுதியில் தங்கி, கட்டிடங்களுக்கு மேற்கூரை அமைக்கும் கூலித் தொழிலாளிகளாக வேலை பார்த்து வந்தனர்.
சம்பவத்தன்று இரவு சுமார் 10 மணியளவில், இருவரும் காய்கறிகள் வாங்கிக்கொண்டு வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். ஹனுமந்தேஸ்வர் கோயில் அருகே உள்ள ஹேரன் நதிக்கரை ஓரம் நடந்து சென்றபோது, இருவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த கணவர் அர்விந்த், மனைவி ரேகாவின் கன்னத்தில் பலமாக அறைந்துள்ளார். இதனால் கடும் ஆத்திரமடைந்த ரேகா, அருகில் கிடந்த ஒரு பெரிய கல்லை எடுத்து அர்விந்தின் தலையில் பலமாகத் தாக்கினார். இதில் மண்டை பிளந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த அர்விந்த், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். கொலை நடந்த இடம் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி என்பதால், அர்விந்திற்கு உடனடி உதவி கிடைக்கவில்லை. கணவர் உயிரிழந்ததை உணர்ந்தும், ரேகா அங்கிருந்து தப்பிச் செல்லவில்லை. மாறாக, ரத்த வெள்ளத்தில் கிடந்த கணவரின் சடலத்தின் அருகிலேயே விடிய விடிய சுணக்கத்துடன் அமர்ந்திருந்தார்.
மறுநாள் காலை அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள், சடலத்தின் அருகில் ஒரு பெண் அமர்ந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த திலக்வாடா காவல்துறையினர், அர்விந்தின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திலேயே இருந்த ரேகாவைக் கைது செய்த போலீஸார், அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
“ஒரு சாதாரண கன்னத்தில் அறைந்த சம்பவத்திற்காக, ஆத்திரத்தில் தனது கணவரையே ஒரு பெண் கொலை செய்திருப்பது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இருவருக்கும் இடையே இருந்த மற்ற பிரச்சனைகள் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்” என்று காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
