இந்தியாவின் இ-காமர்ஸ் துறையில் ஒரு காலத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘ஷாப்க்ளூஸ்’ (ShopClues) நிறுவனம், இன்று அதன் மதிப்பை முழுமையாக இழந்து விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஐஐடி பட்டதாரியால் தொடங்கப்பட்டு, பில்லியன் டாலர் மதிப்பைப் பெற்ற ஒரு நிறுவனம், எதனால் இத்தகைய சரிவைச் சந்தித்தது என்பது குறித்து பார்ப்போம்.
ஐஐடி வாரணாசியில் பி.டெக் முடித்து, ஐஐடி டெல்லியில் மென்பொருள் தொழில்நுட்பம் பயின்ற சஞ்சய் சேத்தி, ஈபே (eBay) உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களில் 15 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். இவர், சந்தீப் அகர்வால் மற்றும் ராதிகா அகர்வால் ஆகியோருடன் இணைந்து 2011-ஆம் ஆண்டு அமெரிக்காவின் சிலிக்கான் வேலியில் ‘ஷாப்க்ளூஸ்’ நிறுவனத்தைத் தொடங்கினார்.
அமேசான், பிளிப்கார்ட் போன்ற நிறுவனங்கள் பெருநகரங்களைக் குறிவைத்த நிலையில், ஷாப்க்ளூஸ் இந்தியாவின் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களை (Tier 2 & 3) இலக்காகக் கொண்டது. “ஆன்லைன் சாந்தினி சவுக்” என்று அழைக்கப்படும் வகையில், பிராண்ட் இல்லாத மலிவு விலை பொருட்களை சாமானிய மக்களிடம் கொண்டு சேர்த்தது. இந்த உத்தி மிகப்பெரிய வெற்றியைத் தந்ததால், 2016-ல் 1.1 பில்லியன் டாலர் (சுமார் ₹10,000 கோடி) மதிப்பீட்டுடன் ‘யுனிகார்ன்’ அந்தஸ்தைப் பெற்றது.
தொடக்கத்தில் சிறு நகரங்களில் மட்டும் கவனம் செலுத்திய அமேசான் மற்றும் பிளிப்கார்ட், பின்னர் மிகப்பெரிய முதலீடுகளுடன் சிறு நகரங்களுக்குள்ளும் ஊடுருவின. சிறந்த லாஜிஸ்டிக்ஸ் மற்றும் அதிரடித் தள்ளுபடிகள் மூலம் ஷாப்க்ளூஸின் சந்தையை அவை பறித்தன. அமைப்புசாரா விற்பனையாளர்களை அதிகம் நம்பியிருந்ததால், ஷாப்க்ளூஸில் விற்கப்பட்ட பொருட்கள் தரம் குறைந்தவை மற்றும் போலியானவை என்ற புகார் எழுந்தது. இதனால் வாடிக்கையாளர்கள் நம்பிக்கை இழந்தனர்.
தரமற்ற பொருட்கள் காரணமாக 30 முதல் 40 சதவீத பொருட்கள் வாடிக்கையாளர்களால் திருப்பி அனுப்பப்பட்டன. இது நிறுவனத்திற்குப் பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தியது. நிறுவனத்தின் வீழ்ச்சிக்கு வணிகக் காரணங்கள் மட்டுமன்றி, அதன் நிறுவனர்களுக்கு இடையேயான மோதல்களும் முக்கியக் காரணமாக அமைந்தன.
அமெரிக்காவில் நடந்த உள்விவர வர்த்தக (Insider Trading) மோசடிப் புகாரால் சந்தீப் அகர்வால் பதவி விலகினார். பின்னர் நிறுவனர்களிடையே ஏற்பட்ட பகிரங்கமான கருத்து வேறுபாடுகள் முதலீட்டாளர்களின் நம்பிக்கையைச் சிதறடித்தன. லாபத்தைக் காட்ட வேண்டும் என்பதற்காக விளம்பரச் செலவுகளைக் குறைத்ததால், வர்த்தகத்தின் அளவு பெருமளவு சரிந்தது. அமலாக்கத் துறையின் நிதிப் பரிமாற்ற விசாரணைகளும் நிறுவனத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தின.
ஒரு காலத்தில் ₹10,000 கோடி மதிப்புடையதாக இருந்த ஷாப்க்ளூஸ், கடந்த 2019-ஆம் ஆண்டு சிங்கப்பூரைச் சேர்ந்த Qoo10 நிறுவனத்தால் வெறும் 70 முதல் 100 மில்லியன் டாலர்களுக்கு வாங்கப்பட்டது. இது அதன் உச்சபட்ச மதிப்பிலிருந்து 90 சதவீதத்திற்கும் குறைவான விலையாகும்.
தற்போது, ஷாப்க்ளூஸ் நிறுவனத்திலிருந்து வெளியேறிய சந்தீப் அகர்வால், ‘ட்ரூம்’ (Droom) என்ற பழைய வாகன விற்பனைத் தளத்தைத் தொடங்கி நடத்தி வருகிறார். இருப்பினும், அந்த நிறுவனமும் தற்போது புனே, ஜெய்ப்பூர் உள்ளிட்ட இடங்களில் ஜிஎஸ்டி தொடர்பான விசாரணைகளை எதிர்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.
