சமூக வலைதளங்களில் புகழ்பெற்ற ‘ரீல்ஸ்’ (Reels) வீடியோக்களுக்காக மக்கள் எவ்வளவு ஆபத்தான காரியங்களிலும் ஈடுபடத் துணிந்துவிட்டனர் என்பதற்குச் சான்றாக, தந்தை ஒருவர் தனது மகளை வீட்டின் மாடியிலிருந்து குதிக்க வைத்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், ஒரு நபர் வீட்டின் தரைத்தளத்தில் நின்று கொண்டிருக்கிறார். அவரது சிறுமி மகள் முதல் மாடியின் கைப்பிடிச் சுவரில்  மிகவும் ஆபத்தான நிலையில் நிற்கிறாள். கீழே நிற்கும் தந்தை, தனது கைகளை விரித்து மகளைக் கீழே குதிக்குமாறு சைகை காட்டுகிறார். அடுத்த சில நொடிகளில், அந்தச் சிறுமி எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி மாடியிலிருந்து தரை நோக்கித் தலைகுப்புறக் குதிக்கிறாள்.

சிறுமி கீழே விழும் இடத்தில், ஒரு மிக மெல்லிய மெத்தை மட்டுமே போடப்பட்டிருந்தது. சிறுமி கீழே விழும்போது அவளது கால்கள் தரையில் மோதுவதற்குச் சில அங்குலங்கள் முன்னதாகவே அந்த நபர் சிறுமியைத் தனது கைகளில் பிடிக்கிறார். ஒருவேளை பிடியில் சிறு தவறு நேர்ந்திருந்தாலும், அந்தச் சிறுமியின் உயிர் போயிருக்கக்கூடும் அல்லது வாழ்நாள் முழுவதும் ஊனமடையும் சூழல் ஏற்பட்டிருக்கும்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான சில நிமிடங்களிலேயே வைரலாகி, பொதுமக்களின் கடும் கோபத்திற்கு ஆளாகியுள்ளது. வெறும் ரீல்ஸ் வீடியோவிற்காகச் சொந்தக் குழந்தையை மாடியிலிருந்து குதிக்க வைத்த இந்த முட்டாள் தந்தையை உடனடியாகச் சிறையில் அடைக்க வேண்டும் எனப் பயனர் ஒருவர் பதிவிட்டுள்ளார். அறிவற்ற மற்றும் வெட்கமற்ற மனிதர்களுக்குச் சமூக வலைதளம் என்பது பணத்தையும் புகழையும் சம்பாதிப்பதற்கான ஒரு கருவியாகிவிட்டது என்று மற்றொருவர் சாடியுள்ளார்.

மேலும் புகழுக்காகவும், பார்வைகளைப் (Views) பெறுவதற்காகவும் குழந்தைகளைப் பணயம் வைக்கும் இத்தகைய நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறையினருக்குப் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.