
நீண்ட நாட்களுக்கு பின் நான் பார்த்த சிறந்த ஆட்டம் என ஹென்ரிச் கிளாசனை பாராட்டியுள்ளார் வீரேந்திர சேவாக்..
ஹென்ரிச் கிளாசனின் அதிரடியான பேட்டிங்கால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் தென் ஆப்ரிக்கா 416 ரன்கள் குவித்து அபாரமாக ஆடியது. ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணி 50 ஓவர்களில் 400 அல்லது அதற்கு மேல் ரன் குவிப்பது இது 24வது முறையாகும். அதே சமயம் தென்னாப்பிரிக்க அணி அதிகபட்சமாக 7 முறை சாதனை படைத்துள்ளது.
செஞ்சூரியனில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் மிட்செல் மார்ஷ் முதலில் பந்துவீச முடிவு செய்தார். அவரது முடிவு அவரது பந்துவீச்சாளர்களின் தலைவிதியாக மாறும் என்பது கேப்டனுக்கு அப்போது தெரியாது. இப்போட்டியில், குயின்டன் டி காக் மற்றும் ரீஸா ஹென்ட்ரிக்ஸ் ஆகியோர் இன்னிங்ஸை ஆரம்பித்தனர் மற்றும் முதல் விக்கெட்டுக்கு 64 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் இருந்தது.

ரீஸா ஹென்ட்ரிக்ஸ் 28 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார், பின் டி காக் 45 ரன்களில் ஆட்டமிழந்தார்.. கேப்டன் எய்டன் மார்க்ரம் (8) பேட்டிங்கில் சிறப்பாக எதையும் காட்ட முடியவில்லை. 3ஆம் இடத்தில் பேட்டிங் ஆட வந்த ரஸ்ஸி வான் டெர் டஸ்ஸனும் 62 ரன்களை எடுத்தார். தென்னாப்பிரிக்க அணி 34.4 ஓவரில் 194 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்திருந்தது.
தொடர்ந்து ஹென்ரிச் கிளாசன் மற்றும் டேவிட் மில்லர் இருவரும் ஜோடி சேர்ந்தனர். அதன்பின் தான் அதிரடியே தொடங்கியது. கிளாசென் முதல் பந்திலேயே ஒரு அதிரடி தொடக்கத்தை ஏற்படுத்தினார். இருவருமே புயல் போல ஆஸி பந்துவீச்சாளர்களை தாக்கினர். இவர்களது விக்கெட்டை அவர்களால் எடுக்கமுடியவில்லை. கிளாசன் தனது சதத்தை 57 பந்துகளில் பூர்த்தி செய்தார். அதேபோல மறுபுறம் அதிரடியாக மில்லர் அரைசதம் கடந்தார். இறுதியில் கடைசி பந்தில் கிளாசன் ஆட்டமிழந்தார்.
தென்னாப்பிரிக்க அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 416 ரன்கள் குவித்துள்ளது. கிளாசன் 83 பந்துகளை எதிர்கொண்டு 174 ரன்கள் குவித்தார். அதில் அவர், 13 சிக்ஸர்கள் மற்றும் 13 பவுண்டரிகளையும் விளாசினார். மேலும் டேவிட் மில்லர் 45 பந்துகளில் (6 பவுண்டரி, 5 சிக்ஸர்) 82 ரன்களுடன் அவுட் ஆகாமல் இருந்தார்.
இதில் முதல் 32வது ஓவரில் ஹென்ரிச் கிளாசன் 25 பந்துகளில் 24 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். பின்னர் தான் அவரது சூறாவளி தாக்குதல் நடந்துள்ளது. 50 ஓவர் முடிவில் மொத்தம் 83 பந்துகளில் 174 ரன்கள் குவித்துள்ளார்.
குறிப்பாக கடைசி 58 பந்துகளில் மட்டும் கிளாசென் 150 ரன்கள் எடுத்தார். ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இப்படியான ஒரு ஆட்டத்தை எங்குமே பார்த்திருக்க முடியாது. முதலில் ஆடியதற்கும், பின்னர் ஆடியதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. அத்துடன் கிளாசன் மற்றும் மில்லர் இருவரும் 222* (94) ரன்கள் எடுத்ததன் மூலம் ஒருநாள் போட்டிகளில் இதுவரை இல்லாத வேகமான இரட்டை சத பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளனர்..
ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஆடம் ஜம்பா 10 ஓவரில் 113 ரன்கள் கொடுத்துள்ளார். இதுதான் ஒருநாள் கிரிக்கெட்டில் ஒருவர் விக்கெட் எடுக்காமல் அதிக ரன்கள் கொடுத்த மோசமான சாதனையாகும்.
இதையடுத்து ஆஸ்திரேலிய அணி இமாலய இலக்கை நோக்கி ஆடியது. ஆஸ்திரேலிய அணி 34.5 ஓவரில் 252 ரன்களுடன் ஆல் அவுட் ஆனது. இதனால் தென்னாப்பிரிக்க அணி 164 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இவரது ஆட்டத்தை பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பாராட்டி வருகின்றனர். இதனிடையே முன்னாள் இந்திய அதிரடி ஆட்டக்காரர் வீரேந்திர சேவக் தனது எக்ஸ் பக்கத்தில், என்ன ஒரு இன்னிங்ஸ், ஹென்ரிச் கிளாசன், முதல் 25 பந்துகளில் 24 ரன்கள், அடுத்த 58 பந்துகளில் 150 ரன்கள். நீண்ட நாட்களுக்கு பின் நான் பார்த்த சிறந்த ஹிட்டிங் என பாராட்டியுள்ளார்.
What an innings, Heinrich Klaasen , first 25 balls 24 runs, next 58 balls 150.
The best hitting i have seen in a long long time. #AUSvsSA pic.twitter.com/wQQ5Ky79Sm
— Virender Sehwag (@virendersehwag) September 15, 2023
https://twitter.com/shivani__D/status/1702710197943161220