சூப்பர் 4 போட்டியில் வங்காளதேச அணி இந்திய அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 

2023 ஆசிய கோப்பையின் கடைசி சூப்பர் 4 ஆட்டத்தில் வங்கதேச அணிக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி, டீம் இந்தியாவுக்கு 266 ரன்கள் இலக்கை நிர்ணயித்தது. பின்னர் ஆடிய இந்திய அணியால் 49.5 ஓவரில் 259 ரன்கள் எடுக்க முடிந்தது. இருப்பினும், இந்த போட்டியின் தோல்வி எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது, மேலும் 17 ஆம் தேதி இலங்கைக்கு எதிரான இறுதிப் போட்டிக்கு இந்திய அணி ஏற்கனவே பதிவு செய்துள்ளது. அதேசமயம் வங்கதேசம் வெற்றியுடன் தங்களது ஆசியக்கோப்பை பயணத்தை முடித்துள்ளது. இந்திய அணியை வீழ்த்தியுள்ளதால் வங்கதேசத்துக்கு ஆறுதல் பரிசாக இந்த வெற்றி அமையும்.

கில்லின் சதம் வீண் :

வங்கதேசத்துக்கு எதிராக ஓப்பனிங் செய்ய வந்த கேப்டன் ரோகித் சர்மா டக் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். அதேசமயம் திலக் வர்மா மற்றும் இஷான் கிஷான் 5 ரன்களும், கே.எல்.ராகுல் 19 ரன்களும் மட்டுமே எடுக்க முடிந்தது. இதுதவிர சூர்யகுமார் யாதவ் 26 ரன்கள் எடுத்தார். ரவீந்திர ஜடேஜாவும் 7 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் வெளியேறினார். ஆனால் இந்த போட்டியானது ஷுப்மான் கில்லின் 121 ரன்களின் வலுவான இன்னிங்ஸிற்காக நினைவுகூரப்படும். கில் தனது இன்னிங்ஸில் 8 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களை விளாசினார். பின் ஷர்துல் தாகூர் 11 ரன்னில் அவுட் ஆனர். இது தவிர, அக்சர் படேலும் இறுதிவரை போராடினார். ஆனால் அவர் 34 பந்துகளில் 42 ரன்கள் எடுத்த நிலையில், முக்கிய கட்டத்தில் ஆட்டமிழந்தார்.

இந்தியாவுக்கு கடைசி 2 ஓவரில் 17 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், முஸ்தாபிஸூர் 5 ரன்கள் மட்டுமே கொடுத்து ஷர்துல் தாகூர் மற்றும் அக்சர் படேல் விக்கெட்டை எடுத்தார். தொடர்ந்து முகமது ஷமியும், பிரசித் கிருஷ்ணாவும் களத்தில் இருந்தார். இந்த கடைசி ஓவரில் வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட, தன்சிம் ஹசன் சாகிப் வீசிய அந்த ஓவரில் முதல் 3 பந்தில் ரன் எடுக்காத ஷமி 4வது பந்தில் பவுண்டரி அடித்தார். பின் அடுத்த பந்தில் ஷமி (4ரன்கள்) அடித்துவிட்டு 2 ரன் ஓடும்போது ரன் அவுட் ஆனார். இந்திய அணி 49.5 ஓவரில் 259 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் 6 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசம் வெற்றி பெற்றது.

வங்கதேசம் 265 ரன்கள் எடுத்தது :

முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 8 விக்கெட்டுக்கு 265 ரன்கள் எடுத்தது. வங்கதேச அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஷகிப் அல் ஹசன் 80 ரன்கள் எடுத்தார். அதேசமயம் தௌஹீத் ஹிருதயா 54 ரன்களும், நசும் அகமது 44 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி சார்பில் ஷர்துல் தாக்கூர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முகமது ஷமி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதுதவிர பிரசித் கிருஷ்ணா, அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இறுதிப் போட்டியில் இலங்கையை எதிர்கொள்கிறது :

இருப்பினும், இந்த போட்டி இந்திய அணியின் இறுதி தகுதிக்கு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி ஏற்கனவே நுழைந்து விட்டது. இந்திய கிரிக்கெட் அணி தனது முதல் சூப்பர் 4 போட்டியில் பாகிஸ்தானை 228 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதையடுத்து, இந்திய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது. இனி 17ஆம் தேதி அதாவது ஞாயிற்றுக்கிழமை இந்திய அணி இலங்கையை எதிர்கொள்ள உள்ளது.