அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆதரவு படைகளுக்கும், ஈரானுக்கும் இடையிலான போர் இன்று 23-வது நாளை எட்டியுள்ளது. போரின் உச்சக்கட்டமாக இரு நாடுகளும் ஒன்றையொன்று அணுசக்தி நிலையங்களை குறிவைத்துத் தாக்கி வருவதால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரும் பதற்றம் நிலவுகிறது.

ஈரான் தலைநகர் தெக்ரானில் இருந்து 220 கி.மீ தொலைவில் உள்ள முக்கிய அணுசக்தி செறிவூட்டல் தளமான நடான்ஸ் (Natanz) மீது நேற்று இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் அணுசக்தி வளாகத்தில் உள்ள முக்கியக் கட்டமைப்புகள் பலத்த சேதமடைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரானின் அணுசக்தி கனவை முடக்கும் நோக்கில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கருதப்படுகிறது. நடான்ஸ் தாக்குதலுக்குப் பதிலடியாக, இஸ்ரேலின் மிக முக்கிய அணு ஆராய்ச்சி மையமான ஷிமோன் பெரெஸ் நெகேவ் அமைந்துள்ள டிமோனா நகரை நோக்கி ஈரான் ஏவுகணைகளை வீசியது.

இதனால் அணு ஆராய்ச்சி மையத்திலிருந்து வெறும் 13 கி.மீ தொலைவில் ஏவுகணைகள் விழுந்து வெடித்தன. இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்புகள் தடுத்த போதிலும், சில ஏவுகணைகள் குடியிருப்புப் பகுதிகளில் விழுந்தன. டிமோனா மற்றும் தெற்கு இஸ்ரேலில் உள்ள அரத் (Arad) ஆகிய நகரங்களில் நடத்தப்பட்ட இந்தச் சரமாரித் தாக்குதலில் வீடுகள் தரைமட்டமாகின. குழந்தைகள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் ஜலசந்தியை 48 மணி நேரத்திற்குள் திறந்து விட வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த கெடுவை ஈரான் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. மேலும், ஹார்முஸ் தீவு அருகே அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் அதிநவீன எப்-15 (F-15) போர் விமானத்தைத் தங்களது வான் பாதுகாப்பு அமைப்பு சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அதிரடியாக அறிவித்துள்ளது. இது தொடர்பான வீடியோ ஆதாரத்தையும் ஈரான் வெளியிட்டுள்ளது உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.