மத்திய கிழக்கில் கடந்த 23 நாட்களாக நீடித்து வரும் போர் ஒரு முக்கியக் கட்டத்தை எட்டியுள்ளது. ஒருபுறம் ராணுவ நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தப் போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்து வரும் நிலையில், மறுபுறம் ஈரானுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான ரகசியத் திட்டங்களையும் அவரது குழுவினர் தொடங்கியுள்ளனர்.

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் மற்றும் ஆலோசகர் ஸ்டீவ் விட்காஃப் ஆகியோர் இந்தப் பேச்சுவார்த்தைக்கான வியூகங்களை வகுத்து வருகின்றனர். தற்போதைக்கு அமெரிக்கா – ஈரான் இடையே நேரடிப் பேச்சுவார்த்தை ஏதும் நடைபெறவில்லை என்றாலும், எகிப்து, கத்தார் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளின் வாயிலாகத் தூதுச் செய்திகள் பரிமாறப்பட்டு வருகின்றன. ஈரானும் பேச்சுவார்த்தைக்குத் தயார் எனக் கூறினாலும், மிகக் கடுமையான நிபந்தனைகளை முன்வைத்துள்ளது.

அதன்படி  உடனடியாகப் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும். எதிர்காலத்தில் ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படாது என உறுதி அளிக்க வேண்டும். போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் போன்றவைகளாகும்.

ஈரானின் நிபந்தனைகளை ஏற்க மறுத்துள்ள டிரம்ப் நிர்வாகம், பதிலுக்கு 6 அதிரடி நிபந்தனைகளை விதித்துள்ளது. அதன்படி  அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஏவுகணைத் திட்டங்கள் எதையும் செயல்படுத்தக் கூடாது. யுரேனியம் செறிவூட்டும் பணியை முழுமையாக நிறுத்த வேண்டும். நடான்ஸ், இஸ்பஹான் மற்றும் போர்டோ ஆகிய அணுசக்தி தளங்களை முற்றிலுமாக அழிக்க வேண்டும். ஈரானின் அணுசக்தி செயல்பாடுகளைச் சர்வதேச அமைப்புகள் தீவிரமாகக் கண்காணிக்க அனுமதிக்க வேண்டும். பிராந்திய நாடுகளுடன் ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும் (ஏவுகணை எல்லை 1000 கி.மீ-க்குள் இருக்க வேண்டும்). ஹிஸ்புல்லா, ஹூதி மற்றும் ஹமாஸ் போன்ற அமைப்புகளுக்கு நிதி உதவி அளிப்பதை நிறுத்த வேண்டும் போன்றவைகளாகும்.

அமெரிக்காவின் இந்த நிபந்தனைகள் ஈரானின் ராணுவ மற்றும் அணுசக்தி வலிமையை முழுமையாக முடக்கும் வகையில் உள்ளதால், ஈரான் இதனை ஏற்க மறுத்து வருகிறது. “அமெரிக்காவை நம்ப முடியாது” எனத் தெரிவித்துள்ள ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி, ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க வேண்டுமானால் அமெரிக்காவும் இஸ்ரேலும் முதலில் தாக்குதலை நிறுத்தி பாதுகாப்பு உறுதி அளிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

மேலும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஓமனுக்குப் பதிலாக கத்தாரை இடைத்தரகராகப் பயன்படுத்த அமெரிக்கா விரும்புகிறது. டிரம்ப் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருந்தாலும், இப்போதைக்கு ‘போர் நிறுத்தம்’ செய்யும் எண்ணத்தில் இல்லை என்றே தெரிகிறது. இன்னும் 2 முதல் 3 வாரங்களுக்குப் போர் நீடிக்க வாய்ப்புள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் கருதுகின்றனர்.