மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் போர் புரிந்து வரும் ஈரான், தற்போது தனது கவனத்தை ஐரோப்பிய நாடுகளின் பக்கம் திருப்பியுள்ளது. ஐரோப்பாவின் அங்கமான கிரீன்லாந்து தீவிற்கு பாதுகாப்பு அளிக்கத் தயார் என ஈரான் விடுத்துள்ள அறிவிப்பு உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஈரானிய செய்தித் தொடர்பாளர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஐரோப்பிய ஒன்றியத்தால் கிரீன்லாந்திற்குப் பாதுகாப்பு அளிக்க முடியாவிட்டால், அவர்கள் ஈரானின் உதவியைக் கோரலாம். கிரீன்லாந்தின் பாதுகாப்பை உறுதி செய்ய நாங்கள் தயாராக உள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கிரீன்லாந்தை ஆக்கிரமிக்கப் போவதாக எச்சரித்துள்ள நிலையில், நேட்டோ (NATO) நாடுகளிடையே பிளவை ஏற்படுத்த ஈரான் இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். அமெரிக்க அதிபர் டிரம்ப், கிரீன்லாந்து தீவை அமெரிக்காவுடன் இணைக்கும் தனது பழைய திட்டத்தை மீண்டும் கையில் எடுத்துள்ளார். அமெரிக்காவின் பாதுகாப்புக்கு கிரீன்லாந்து மிக அவசியம் என டிரம்ப் வாதிடுகிறார்.

இதற்கு ஒத்துழைக்க மறுக்கும் ஐரோப்பிய நாடுகள் மீது 10 முதல் 25 சதவீதம் வரை இறக்குமதி வரி விதிக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார். ஆனால், டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து பிரதமர்கள், தங்களது இறையாண்மையில் சமரசம் செய்ய முடியாது என டிரம்பின் கோரிக்கையைத் திட்டவட்டமாக நிராகரித்துள்ளனர்.

மத்திய கிழக்கில் போர் 23-வது நாளை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதல்களுக்கு ஈரான் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. குறிப்பாக, உலக எரிசக்தி வர்த்தகத்திற்கு மிக முக்கியமான ஹார்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) மூடுவதற்கு ஈரான் முயற்சி மேற்கொண்டுள்ளது. இது உலக நாடுகளிடையே கடும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே கிரீன்லாந்து விவகாரத்தில் சர்வதேச அளவில் விமர்சனங்களைச் சந்தித்த டிரம்ப், தற்போது ஈரானின் இந்தத் தலையீட்டால் மேலும் தர்மசங்கடத்திற்கு உள்ளாகியுள்ளார். நட்பு நாடுகளான ஐரோப்பிய நாடுகளுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே விரிசலை ஏற்படுத்த ஈரான் எடுத்துள்ள இந்த ‘கிரீன்லாந்து அஸ்திரம்’ சர்வதேச அரசியலில் ஒரு புதிய திருப்பமாகக் கருதப்படுகிறது.