
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மத்திய பேருந்து நிலையத்தில் சிறுமி ஒருவர் உடல்நிலை சரியில்லாத நிலையில் சுற்றித் திரிவதாக காவல்துறையினருக்கு தகவல் ஒன்று கிடைத்தது. அந்த தகவலின் பேரில் அப்பகுதிக்குச் குழந்தைகள் நலக்குழு சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது பேருந்து நிலையத்தில் உடல்நிலை சரியில்லாத நிலையில் 15 வயது சிறுமி ஒருவர் இருப்பதை கண்டறிந்தனர். அதன் பின் அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அந்தச் சிறுமி பல்லடத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. மேலும் அந்தச் சிறுமி கடந்த 2 மாதத்திற்கு முன்பே வீட்டில் தாய் திட்டியதால் சண்டை போட்டுவிட்டு வெளியேறியுள்ளார். அப்போது திருப்பூர் பாண்டியன் நகரைச் சேர்ந்த மினி பஸ் ஓட்டுனர் முகமது நசீர் (22) என்பவர் சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி தனியே அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
அதனால் சிறுமி கர்ப்பமாகி உள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து கொங்கு நகர் அனைத்து மகளிர் காவல் துறையினர் முகமது நசீர் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.