மேற்கு வங்க மாநிலம் சோனார்பூரின் காமராபாத் பகுதியில், தேர்தலுக்குப் பிந்தைய வன்முறையால் பாதிக்கப்பட்ட மற்றும் உயிரிழந்த திரிணாமுல் காங்கிரஸ் தொண்டரின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக அக்கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அபிஷேக் பானர்ஜி சனிக்கிழமை மாலை சென்றிருந்தார். அவர் மாலை 4:30 மணியளவில் காமராபாத் பகுதிக்கு வந்தபோது, அங்கு ஏற்கனவே திரண்டிருந்த பாஜவினர் மற்றும் ஏராளமான உள்ளூர் பொதுமக்கள் அவருக்கு எதிராகக் கடுமையான கோஷங்களை எழுப்பினர்.
மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் தனது காரை விட்டுவிட்டு, இரு சக்கர வாகனத்தில் அவர் செல்ல முயன்றார். அப்போது ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள், குறிப்பாகப் பெண்கள் முன்னின்று அபிஷேக் பானர்ஜியை நோக்கி “திருடன், திருடன்” என முழக்கமிட்டு, அவர் மீது பச்சை முட்டைகளை வீசித் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலால் அங்கு பெரும் குழப்பமும் வன்முறையும் வெடித்த சூழலில், பாதுகாப்புப் படையினர் உடனடியாகச் செயல்பட்டு அபிஷேக் பானர்ஜிக்குத் தலைக்கவசம் அணிவித்து, பலத்த பாதுகாப்பு வளையத்தின் கீழ் அவரைப் பத்திரமாக மீட்டனர்.
இந்தத் தாக்குதல் குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கடந்த 15 ஆண்டுகால திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில் தங்கள் பகுதிக்கு எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை எனத் தங்களின் நீண்ட நாள் வேதனையை வெளிப்படுத்தினர். மோசமான சாலைகள், சுத்தமான குடிநீர் தட்டுப்பாடு போன்ற கோரிக்கைகளை முன்வைத்து மம்தா பானர்ஜி முதலமைச்சராக இருந்தபோதே பலமுறை மனுக்கள் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், பொதுமக்கள் பட்டினியால் வாடும்போது தலைவர்கள் மட்டும் ஆடம்பரமாக வாழ்வதாகவும் குற்றம் சாட்டினர்.
இதற்கிடையே, தன் மீதான இந்தத் தாக்குதலுக்கு பாஜவினர் தான் முழு காரணம் என்று அபிஷேக் பானர்ஜி நேரடியாகக் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “இது பாஜவினால் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட தாக்குதல்; பாஜவின் ஜனநாயகத்திற்கு இதுவே சான்று. மேலும், இவ்வளவு பெரிய பதற்றம் நிலவியபோதும் சம்பவ இடத்தில் காவல்துறையினர் எவரும் இல்லை” என்று சாடினார். இச்சம்பவத்தை அடுத்து சோனார்பூர் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, அரசியல் பதற்றம் அதிகரித்துள்ளது.
