இந்தியாவில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்கும் யுபிஎஸ்சி குடிமைப் பணித் தேர்வை ஒருமுறை தேர்ச்சி பெறுவதே பலருக்குப் பெரும் சவாலாக இருக்கும் வேளையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த அனுகிருதி சர்மா என்ற பெண், அத்தேர்வை இரண்டு முறை வென்று சாதனை படைத்துள்ளார். ஜெய்ப்பூரில் தனது பள்ளிப் படிப்பை முடித்த அவர், சித்த மருத்துவப் பிரிவில் இளங்கலை (BSMS) பட்டம் பெற்றார். பின்னர், கொல்கத்தாவில் உள்ள புகழ்பெற்ற இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (IISER) உயர் படிப்பைத் தொடர்ந்தார்.
அவரது அசாத்திய திறமையால், கடந்த 2012-ஆம் ஆண்டு அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ரைஸ் பல்கலைக்கழகத்தில் எரிமலை ஆராய்ச்சி தொடர்பான பிஎச்டி படிப்பிற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த ஆராய்ச்சியின் போது, உலகின் மிக உயரிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, அனுகிருதிக்கு மிகப்பெரிய சம்பளத் தொகுப்புடன் கூடிய வேலைவாய்ப்பை வழங்கியது.
அமெரிக்காவில் நாசா போன்ற உலகப் புகழ்பெற்ற அமைப்பில் பணிபுரியும் பொன்னான வாய்ப்பு கிடைத்தபோதிலும், தனது தாய்நாட்டிற்குச் சேவை செய்ய வேண்டும் என்ற லட்சியத்தோடு அந்த ஆஃபரை அனுகிருதி அதிரடியாக நிராகரித்தார். அறிவியல் துறையிலேயே தொடருமாறு அவரது பேராசிரியர்கள் அறிவுறுத்தியதையும் கடந்து, இந்தியா திரும்பிய அவர் சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான தயாரிப்பில் இறங்கினார். தொடக்க காலத்தில் முதல் இரண்டு முயற்சிகளில் தோல்வியைச் சந்தித்தாலும், தனது விடாமுயற்சியால் 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற 4-ஆவது முயற்சியில் அகில இந்திய அளவில் 355-ஆவது ரேங்க் பெற்று இந்திய வருவாய்ப் பணிக்கு தேர்வானார்.
எனினும், தனது ஐபிஎஸ் கனவிற்காகத் தொடர்ந்து போராடிய அவர், 2020-ஆம் ஆண்டு தனது 5-ஆவது முயற்சியில் 138-ஆவது ரேங்க் பெற்று, தனது லட்சியப் பதவியான ஐபிஎஸ் அதிகாரியாக உருவெடுத்தார். தனது இந்த அசாத்திய வெற்றிக்குத் தனது பெற்றோருடன் இணைந்து, பக்கபலமாக நின்ற கணவரும் முக்கியக் காரணம் எனக் கூறும் அனுகிருதி சர்மா, தற்போது உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஐபிஎஸ் அதிகாரியாகத் தனது சிறப்பான சேவையை வழங்கி வருகிறார்.
