உத்தரப் பிரதேச மாநிலத் தலைநகர் லக்னோவில், சாலையில் சென்ற இரு சக்கர வாகன ஓட்டிகளைப் பெண் ஒருவர் சரமாரியாகத் தாக்கியதும், அங்கு நின்றிருந்த காவல்துறை அதிகாரி ஒருவர் அதைத் தடுக்காமல் சம்பவ இடத்திலிருந்து நழுவ முயன்றதுமான அதிர்ச்சி வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லக்னோவின் முக்கியச் சாலை ஒன்றில் ஏற்பட்ட சிறிய அளவிலான போக்குவரத்து தகராறு காரணமாக, ஆத்திரமடைந்த ஒரு பெண், அங்கிருந்த இரண்டு இரு சக்கர வாகன ஓட்டிகளைப் பொது இடத்தில வைத்துத் தாக்கத் தொடங்கினார்.

இந்த வன்முறைச் சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் உடனடியாகத் தலையிட்டு அந்தப் பெண்ணைத் தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால், அதே இடத்தில் காவல்துறைச் சீருடையில் நின்றிருந்த ஓர் அதிகாரி, சண்டையை விலக்கி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்குப் பதிலாக, சம்பவ இடத்திலிருந்து  செல்ல முயன்றது பொதுமக்களை மேலும் ஆத்திரமடையச் செய்தது.

பொதுமக்கள் அந்த அதிகாரி மற்றும் பெண்ணைச் சூழ்ந்துகொண்டு கேள்வி எழுப்பிய நிலையில், அங்கிருந்தவர்கள் எடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி பொதுமக்களின் கடுமையான கண்டனங்களைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் உத்தரப் பிரதேச காவல்துறை உடனடியாகத் தலையிட்டு அதிரடி “கடுமையான நடவடிக்கை” எடுத்துள்ளது. கடமையில் இருந்து தவறியது மற்றும் பொறுப்பில் இருந்து தப்பிக்க முயன்றது ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ், வீடியோவில் இருந்த காவல்துறை அதிகாரி உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும், தாக்குதலில் ஈடுபட்ட பெண் மீது வன்முறைப் பிரிவிலும், அந்த அதிகாரி மீது துறை ரீதியான விசாரணை மற்றும் கடமை தவறியதற்கான எஃப்.ஐ.ஆர் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, சாட்சிகளிடம் விசாரணை நடத்தி, விரைந்து அறிக்கை சமர்ப்பிக்க உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.