இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் 15 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி இந்திய அணிக்காக அறிமுகமானார். தனது முதல் போட்டியிலேயே ஜோப்ரா ஆர்ச்சர் மற்றும் ஜோஷ் டங் போன்ற வேகப்பந்து வீச்சாளர்களின் பந்துவீச்சில் அசத்தலாக சிக்ஸர்களை விளாசி, தான் ஒரு திறமையான வீரர் என்பதை நிரூபித்தார்.

14 ரன்களில் ஆட்டமிழந்தாலும், களத்தில் அச்சமின்றி விளையாடிய அவரது ஆட்டம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இது குறித்துப் பேசிய மூத்த சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், வைபவ் சூர்யவன்ஷியை யாருடனும் ஒப்பிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

அவரை மற்றொரு சச்சின் என்றோ, சேவாக் என்றோ அழைப்பதை விடுத்து, ஒரு தனித்துவமான திறமை கொண்ட ‘வைபவ் சூர்யவன்ஷி’யாகவே நாம் பார்க்க வேண்டும் என்றும், அவரது பயணத்தை ரசிக்க வேண்டும் என்றும் அஸ்வின் கூறியுள்ளார்.

அதேவேளையில், டி20 உலகக்கோப்பையில் சிறப்பாகச் செயல்பட்டு ‘பிளேயர் ஆஃப் த டூர்னமென்ட்’ விருது பெற்ற சஞ்சு சாம்சனை, அணியின் பிளேயிங் லெவனில் இருந்து நீக்கியது வருத்தமளிப்பதாக அஸ்வின் கவலை தெரிவித்துள்ளார்.

“>

 

சஞ்சு சாம்சனைத் திடீரென நீக்கியது அவர் மனதில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கேள்வி எழுப்பிய அஸ்வின், இந்திய அணியின் டாப் ஆர்டரில் தற்போது இடது கை பேட்ஸ்மேன்கள் அதிகமாக இருப்பதைச் சுட்டிக்காட்டினார்.

சஞ்சு சாம்சனுக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதியைச் சரிசெய்யும் வகையில், அணி நிர்வாகம் மற்றும் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ஆகியோர் அவருக்குச் சரியான வாய்ப்புகளை மீண்டும் வழங்க வேண்டும் என்றும் அஸ்வின் வலியுறுத்தியுள்ளார்.