உத்தரப்பிரதேச மாநிலம் பிருந்தாவனத்தில் ஏற்பட்ட கோரப் படகு விபத்தில், லூதியானாவைச் சேர்ந்த 55 வயது மூதாட்டி ராஜேந்தர் கவுர் என்பவர் தான் பார்த்த ஒரு இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோ மூலம் உயிர் தப்பியுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. படகு கவிழ்ந்தவுடன் தண்ணீரில் விழுந்த அவர், நீரில் மூழ்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று ரீல்ஸ் வீடியோவில் பார்த்த குறிப்புகளைப் பின்பற்றியுள்ளார். வாயைத் திறக்காமல் மூச்சை அடக்கிக் கொண்டு, கைகளை நேராக வைத்து கால்களை அசைத்ததன் மூலம் அவர் மூழ்காமல் தப்பித்து, படகோட்டிகளால் மீட்கப்பட்டுள்ளார்.
இருப்பினும், இந்த விபத்தில் 15 யாத்ரீகர்கள் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் படுகாயமடைந்து சண்டிகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரேகா ஜெயின் என்ற பெண்ணின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. உரிய நேரத்தில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை கிடைக்காததால் தனியார் மருத்துவமனைக்கு மாற்றியதாகவும், சிகிச்சை செலவுக்குப் பணமின்றி தவிப்பதாகவும் அவரது மகன் கண்ணீருடன் வீடியோ வெளியிட்டுள்ளார். அரசின் உதவிக்காக அவர் விடுத்துள்ள இந்த உருக்கமான வேண்டுகோள் தற்போது இணையத்தில் மிகப்பெரிய அளவில் ரீச் பெற்று வருகிறது.
