ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, இலங்கை தமிழர்களுக்காக தமிழகத்தில் யார் குரல் கொடுத்தாலும் அதை வரவேற்பதாகத் தெரிவித்தார்.

சென்னை எழும்பூரில் உள்ள ம.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கூறியதாவது:  “ஈழத்தமிழர்கள் படுகொலைக்கு இன்னும் எந்த நீதி நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஒரு லட்சத்து 37 ஆயிரம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

இத்தனை ஆண்டுகள் கடந்தபோதும் இலங்கை தமிழர்களுக்கு நீதி கிடைக்கவில்லை. தமிழீழம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இன்னும் பலர் இருக்கிறார்கள்.

அவர்களுக்கு சுதந்திரம் கிடைக்கும் வகையில், ஐக்கிய நாடுகள் மேற்பார்வையில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

மேலும், “இலங்கை தமிழர்களுக்காக தமிழ்நாட்டில் யார் குரல் கொடுத்தாலும், அதில் நடிகர் விஜயும் உட்பட, அவர்களை மனதார வரவேற்கிறேன்” என்றும் வைகோ தெரிவித்தார்.

மேலும் முன்னதாக ஈழ தமிழர்கள் நம்முடைய சொந்தம் எனவும் அவர்களுக்காக குரல் கொடுக்க வேண்டியது நம்முடைய கடமை என்றும் நடிகர் விஜய் பேசியது குறிப்பிடத்தக்கதாகும்.