மத்தியப் பிரதேச மாநிலம் ஜாபுவா மாவட்டத்தில், காதலனுடன் சென்றதற்காக 32 வயது மதிக்கத்தக்க பழங்குடியினப் பெண் ஒருவருக்கு கிராமத்தினர் முன்னிலையில் கொடூர தண்டனை வழங்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். தனது மாமனார் தன்னைத் தொடர்ந்து மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் சித்திரவதை செய்து வந்ததாக அந்தப் பெண் குற்றம் சாட்டியுள்ளார். இந்த கொடுமை தாங்க முடியாமல், கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் தனது வீட்டை விட்டு வெளியேறி காதலனுடன் வசித்து வந்துள்ளார்.

இது குறித்து ஊர் பெரியவர்கள் முன்னிலையில் கட்டப்பஞ்சாயத்து நடத்தப்பட்டது. அந்தப் பெண் மீண்டும் தனது கணவருடன் தான் வாழ வேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி அவர் கணவர் வீட்டிற்குத் திரும்பியபோது, அவருக்குக் காத்திருந்தது நரக வேதனை. கிராம மக்கள் முன்னிலையில் அந்தப் பெண்ணின் ஆடைகளைக் களைந்து, அவரது தலைமுடி வெட்டப்பட்டது. அத்துடன் நில்லாமல், தண்டனையாகத் தனது கணவனைத் தோளில் சுமந்து கொண்டு கிராமம் முழுவதும் நடக்கக் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார். இந்த கொடூரத்தை அங்கிருந்தவர்கள் தடுத்த நிறுத்தாமல், செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, அந்த கிராமத்தில் போலீசார் அதிரடி விசாரணை மேற்கொண்டனர். இது குறித்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பிரதிபால் சிங் மஹோபியா கூறுகையில், கடந்த ஏப்ரல் 12-ஆம் தேதி இரவு இந்த கொடூரச் சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பாக 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண்ணின் கணவர் உட்பட நான்கு பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களைத் தேடி வருகிறோம் என்றார்.

மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் அடையாளத்தை வெளிப்படுத்தும் வகையில் வீடியோக்களைப் பகிர்ந்தவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்துள்ளனர். தற்போது அந்தப் பெண்ணிற்கு உரிய பாதுகாப்பும், மனநல ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.