தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் மற்றும் திமுக துணை பொதுச்செயலாளர் ஐ.பெரியசாமி, 2006–2011 காலக்கட்டத்தில் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக ரூ.2 கோடி சொத்து குவித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் திண்டுக்கல் கோர்ட்டு அவரையும் குடும்பத்தினரையும் விடுவித்திருந்தாலும், மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில் ஐகோர்ட்டு உத்தரவை ரத்து செய்து மீண்டும் விசாரணைக்கு அனுப்பியது. இதன் பின்னணியில், சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அமலாக்கத்துறை திடீரென விசாரணை தொடங்கியது.

இதையடுத்து நேற்று காலை முதலே சென்னை அடையார் கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் பெரியசாமியின் அரசு இல்லம், திண்டுக்கல் கோவிந்தாபுரம் வீடு, அவரது மகன் பழனி எம்.எல்.ஏ. செந்தில்குமார் தங்கியிருக்கும் இடம், மகள் இந்திராணி வீடு மற்றும் குடும்பத்தினரின் நூற்பாலை என பல இடங்களில் ஒரே நேரத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் கடும் பாதுகாப்பில் நடந்த இந்த சோதனை 12 மணி நேரம் நீடித்தது. சோதனையின்போது பரபரப்பான சூழல் நிலவ, திமுக தொண்டர்கள் வீடுகள் முன்பு திரண்டனர்.

சோதனையின் போது, பணம் அல்லது நகை எதுவும் கைப்பற்றப்படவில்லை என்றாலும், சொத்து ஆவணங்கள், முதலீடு விவரங்கள், வங்கிக் கணக்கு விவரங்கள், செல்போன்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அமலாக்கத்துறை தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அதிரடி நடவடிக்கை திண்டுக்கல் மற்றும் சென்னை பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி, அடுத்தடுத்த விசாரணைகள் எப்படி செல்லும் என அரசியல் வட்டாரங்களில் கவனம் செலுத்தப்படுகிறது.