சத்தீஸ்கர் மாநிலம் அம்பிகாபூர் மாவட்டத்தில், கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு அரங்கேறியுள்ள ஒரு கொடூரமான கொலைச் சம்பவம் ஒட்டுமொத்த மாநிலத்தையும் உலுக்கியுள்ளது.
கடந்த ஏப்ரல் 3-ம் தேதி, மகாமாயா நுழைவு வாயில் அருகே உள்ள ஒரு குடிசைப்பகுதியில் இரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்ணின் உடலை மீட்டுப் போலீஸார் விசாரணை நடத்தினர். அந்தப் பெண்ணின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் வெளிவந்துள்ள தகவல்கள் அதிகாரிகளையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அந்தப் பெண்ணின் நெஞ்சுப் பகுதியில் உள்ள 12 விலா எலும்புகள் உடைக்கப்பட்டு, எலும்புத் துண்டுகள் குத்தியதில் இதயம் மற்றும் நுரையீரல் கிழிந்து அந்தப் பெண் துடிதுடிக்க உயிரிழந்துள்ளார்.
அதுமட்டுமின்றி, அவரது தலையிலும் பலமான காயங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கொலையாளி அந்தப் பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்ததோடு மட்டுமல்லாமல், அவரது அந்தரங்க உறுப்பில் பிளாஸ்டிக் பாட்டிலைச் சொருகி சித்திரவதை செய்துள்ளான்.
10 ஆண்டுகளுக்கு முன்பு கணவனை இழந்த அந்தப் பெண், ஒரு இளைஞருடன் பழகி வந்துள்ளார். சம்பவத்தன்று அந்த இளைஞருடன் அவர் சாலையில் நடந்து சென்ற சிசிடிவி காட்சிகள் சிக்கியுள்ளன.
அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காகப் பெண்ணின் முகத்தை சிதைத்துள்ள அந்தப் பாவிக்காகப் போலீஸார் வலைவீசித் தேடி வருகின்றனர்.
டெல்லி நிர்பயா சம்பவத்தைப் போன்ற இந்த மிருகத்தனமான செயலுக்குக் காரணமானவருக்குத் தூக்குத் தண்டனை வழங்க வேண்டும் என அம்மாநில முன்னாள் துணை முதல்வர் டி.எஸ்.சிங் தியோ வலியுறுத்தியுள்ளார்.
