12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி மாற்றம் செய்யப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்..

தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3ம் தேதி முடிவடைந்தது. இந்த தேர்வை கிட்டத்தட்ட 8 லட்சத்திற்கும் மேலான மாணவ, மாணவிகள் எழுதினர். இந்த நிலையில் மே 5ம் தேதி 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தேர்வு முடிவுகள் வெளியாவதில் காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன..

இந்நிலையில் தேர்வு முடிவு வெளியாகும் தேதி மாற்றம் செய்யப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். வருகின்ற 7ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற இருக்கிறது. எனவே இதனை கருத்தில் கொண்டு 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியில் மாற்றம் செய்யப்படும் என்றார். மேலும் திட்டமிட்டபடி மே 5ம் தேதி ரிசல்ட் வெளியானால் மாணவர்களின் மனநிலை பாதிக்கப்படலாம். மே 7ம் தேதி நீட் தேர்வு நடப்பதால் முதல்வருடன் ஆலோசித்து புதிய தேதி அறிவிக்கப்படும் என  அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.