தமிழகத்தின் மருத்துவ நல்வாழ்வுத்துறை மற்றும் சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழ்நாட்டில் மருந்து தட்டுப்பாடு கிடையாது. சிலர் வேண்டுமென்றே பொய்யான தகவல்களை பரப்புகிறார்கள். தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்களில் மருந்து தட்டுப்பாடுகள் இருந்தால் பொதுமக்கள் உடனடியாக 104 என்ற நம்பருக்கு தொடர்பு கொண்டு புகார் கொடுக்கலாம். இதேபோன்று இரவு நேரங்களில் 108 ஆம்புலன்ஸ் சேவை இயக்கப்படவில்லை என்றாலும் புகார் கொடுக்கலாம்.

உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. அதன் பிறகு புதுக்கோட்டையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள நரம்பியல் அறுவை சிகிச்சை மையத்திற்கு கூடுதல் உபகரணங்கள் வாங்க ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் கட்டப்பட்டுள்ளது போன்று தமிழகத்தில் தற்போது 708 மருத்துவமனைகள் நவீன வசதிகளோடு கட்டப்பட்டு வருகிறது. இதில் 500 மருத்துவமனைகளின் பணிகள் முடிவடையும் நிலையில் இருக்கிறது. இந்த 500 மருத்துவமனைகளும் இன்னும் 15 நாட்களுக்குள் திறக்கப்படும். இந்த மருத்துவமனைகளுக்கான செவிலியர்கள் மற்றும் மருத்துவர்களை நியமிக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் தமிழகத்தில் தற்போது கொரோனா தினசரி பாதிப்பு 500 என்று அளவில் இருக்கிறது என்று தெரிவித்தார்.