திருமணத்திற்காக ஆசையோடு காத்திருந்த ஒரு இளம் ஜோடியின் இல்லறக் கனவு, ஒரு நொடியில் கருகிப்போன சோக நிகழ்வு கர்நாடகாவில் அரங்கேறியுள்ளது. இன்னும் பதினொரு நாட்களில் திருமணம் நடக்கவிருந்த நிலையில், போட்டோ ஷூட் எடுத்து முடித்த சில மணி நேரங்களிலேயே மணமக்கள் இருவரும் விபத்தில் பலியான சம்பவம், அவர்களது குடும்பத்தினரையும் உறவினர்களையும் மீளாத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தில், கரியப்பா மடிவாளா மற்றும் கவிதா ஆகிய இருவருக்கும் வரும் 20-ஆம் தேதி கூட்டுத் திருமணம் நடைபெற இருந்தது. திருமணத்தை உற்சாகப்படுத்தும் வகையில், முன்கூட்டியே பல்வேறு பகுதிகளில் விதவிதமான போஸ்களுடன் மகிழ்ச்சியாகப் புகைப்படங்களை எடுத்துள்ளனர். அந்த அழகான நினைவுகளைச் சேகரித்து முடித்த பின், கவிதாவை வீட்டில் விடுவதற்காகக் கரியப்பா மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றுள்ளார்.
அப்போது, கங்காவதி அருகே திடீரென எதிரே வந்த லாரி பயங்கரமாக மோதியதில், மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட கவிதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சிறிது நேரத்தில் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் மணமகன் கரியப்பாவின் உயிரும் பிரிந்தது. திருமணப் பரபரப்பில் இருந்த குடும்பத்தினர், தற்போது தங்கள் பிள்ளைகளின் சடலத்தைப் பார்த்து கதறித் துடிக்கும் காட்சி பார்ப்போரின் கல் நெஞ்சையும் உருக்குவதாக உள்ளது.
