2026 டி20 உலகக்கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயித்த 196 ரன்கள் என்ற இமாலய இலக்கை, சஞ்சு சாம்சனின் 97 ரன்கள் அதிரடியால் இந்தியா எட்டிப்பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இந்த வரலாற்றுச் சாதனையைக் கொண்டாடும் வகையில் முன்னாள் வீரர் முகமது கைப் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. உலகக்கோப்பை வரலாற்றிலேயே இவ்வளவு பெரிய ஸ்கோரை இதற்கு முன் யாரும் சேஸ் செய்ததில்லை என்றும், விராட் கோலி செய்த மேஜிக்கை இப்போது சஞ்சு சாம்சன் செய்து காட்டியுள்ளார் என்றும் கைப் நெகிழ்ச்சியுடன் பாராட்டியுள்ளார்.
கடந்த 11 ஆண்டுகளாக அணியில் இடம்பிடிப்பதும், பின் நீக்கப்படுவதுமாகப் பல போராட்டங்களைச் சந்தித்த சஞ்சு சாம்சனுக்கு, இந்த உலகக்கோப்பையில் ஆடும் லெவனில் இடம் கிடைக்காமல் தண்ணீர் கொடுக்கும் வீரராகவே இருந்தார். ஆனால், தென்னாப்பிரிக்காவிடம் இந்தியா தோற்ற பிறகு கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொண்டு, 50 பந்துகளில் 12 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் அவர் ஆடிய ஆட்டம் சரித்திரத்தில் இடம்பிடித்துவிட்டது. “திறமை இருந்தும் ஓரங்கட்டப்பட்ட ஒரு வீரர், நெருக்கடியான நேரத்தில் அணியைக் காப்பாற்றியதுதான் உண்மையான வெற்றி” என கைப் தனது வீடியோவில் சஞ்சுவின் விடாமுயற்சியைப் புகழ்ந்து தள்ளியுள்ளார்.
